தமிழ்நாடு

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு ரூ.61 லட்சம்

15th Mar 2021 09:42 PM

ADVERTISEMENT


போடி: போடி சட்டப்பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மொத்த அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 61 லட்சத்து 19 ஆயிரத்து 162 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓ. பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 12) போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவுடன் அவர் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் சொத்து விபரங்களைக் குறிப்பிட்டுள்ளார். 

அதன் விபரம்:

ஓ. பன்னீர்செல்வம்: கையிருப்புத் தொகை ரூ.23,500. சிட்டி யூனியன் வங்கியில் இரண்டு கணக்குகள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒரு கணக்கு என வங்கிகளில் ரூ. 11 லட்சத்து 42 ஆயிரத்து 698 இருப்பு உள்ளது. பெரியகுளம் கூட்டுறவு வங்கியில் பங்கு தொகை ரூ. 100. 

ADVERTISEMENT

இவர் பயன்படுத்தும் மூன்று சொகுசு கார்களின் மதிப்பு ரூ.48 லட்சத்து 85 ஆயிரத்து 424. தங்க நகை 2 சவரன் வைத்துள்ளார். மதிப்பு ரூ.67 ஆயிரத்து 440. இப்படியாக அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு  ரூ.61,19,162. அசையா சொத்துக்கள் எதுமில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடனாக மனைவிக்கு ரூ.65 லட்சத்து 55 ஆயிரத்து 411 தரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓ. பன்னீர்செல்வம் மனைவி ப.விஜயலட்சுமி: 

கையிருப்பு ரூ. 3 லட்சத்து 82 ஆயிரத்து 500. சென்னையில் உள்ள இரண்டு வங்கிகளில் இருப்பு ரூ.23 லட்சத்து 98 ஆயிரத்து 824. பெரியகுளம் கூட்டுறவு வங்கி பங்கு தொகை ரூ. 7 ஆயிரத்து ஐநூறு. 

தனி நபர் கடனாக கணவருக்கு ரூ.65 லட்சத்து 55 ஆயிரத்து 411, மகன் விஜயபிரதீப்புக்கு ரூ. 3 கோடியே 12 லட்சத்து 30 ஆயிரத்து 803 என மொத்தம் 3 கோடியே 77 லட்சத்து 86 ஆயிரத்து 214 கடன் கொடுத்துள்ளார்.

விஜயலட்சுமி பெயரில் 43 லட்சத்து 34 ஆயிரத்து 377 மதிப்புள்ள இரண்டு சொகுசு கார்கள் உள்ளன. ரூ. 8 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் தங்க நகைகளை வைத்துள்ளார். மொத்த அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 4 கோடியே 57 லட்சத்து 52 ஆயிரத்து 415.

தென்கரை, தாமரைக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் வைத்துள்ள நிலம், வீடு ஆகிய அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 2 கோடி 63 லட்சத்து 75 ஆயிரத்து 106 ஆகும். இவரது மகன் ரவீந்திரநாத்துக்கு 2 கோடியே 6 லட்சத்து 89 ஆயிரத்து 746 தரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2016 தேர்தலின் போது ஓ. பன்னீர்செல்வத்தின் அசையும் சொத்து மதிப்பு ரூ. 33 லட்சத்து 20 ஆயிரத்து 529 பைசா 92 எனவும், விஜயலட்சுமியின் அசையும் சொத்து மதிப்பு ரூ. 22 லட்சத்து 44 ஆயிரத்து 545 பைசா 40 எனவும், விஜயலட்சுமியின் அசையா சொத்து மதிப்பு ரூ. 98 லட்சம் எனவும் காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : OPS
ADVERTISEMENT
ADVERTISEMENT