தமிழ்நாடு

தமிழகம் முழுதும் தலைவர் கருணாநிதியே வேட்பாளர்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

13th Mar 2021 10:03 AM

ADVERTISEMENT


தமிழகம் முழுதும் தலைவர் கருணாநிதியே வேட்பாளர். வெற்றியன்றி வேறில்லை என்கிற ஒருமித்த சிந்தனையுடன் உழைப்போம். “மாச்சரியங்களுக்கு இடம்கொடுக்காமல், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வெற்றியினை ஈட்டிடக் களப்பணியாற்றுவோம். வரலாறு போற்றும் வெற்றியை தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நாம் அனைவரும் காணிக்கையாக்குவோம்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகம் முழுதும் தலைவர் கருணாநிதியே வேட்பாளர். 

ஜனநாயக அறப்போர்க்களமான தேர்தல் களத்திற்கு கழகத்தின் தீரர்கள் ஆயத்தமாகி விட்டார்கள். தலைவர் கருணாநிதி  நம்முடன் இல்லாத கழகத்தின் முதல் சட்டப்பேரவை வேட்பாளர் பட்டியல் என்பது இதயத்தை அழுத்தினாலும், அதன் ஒவ்வொரு துடிப்பிற்கும் கர்த்தாவாக அவர்தானே இருக்கிறார்; அவர்தானே நமக்கு விசையேற்றி நாள்தோறும் வேகமாக இயக்குகிறார்; அவர்தானே கழக உடன்பிறப்பு ஒவ்வொருவர் முகத்திலும் ஒளி உமிழ்ந்து பிரகாசிக்கிறார் என்கிற உணர்வுடனும் உத்வேகத்துடனும் - மிகுந்த கவனத்துடன் வேட்பாளர் பட்டியலைத் தயாரித்தேன்.

இந்த வெற்றி வேட்பாளர் பட்டியல் 173 என்ற எண்ணிக்கையுடன் நிறைவடைந்துவிடவில்லை. தோழமைக் கட்சியினர் போட்டியிடும் 61 தொகுதிகளையும் உள்ளடக்கியதுதான் நமது வெற்றிப் பட்டியல். 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே கழக வேட்பாளர்கள்தான். சில தொகுதிகளில் சின்னங்கள் மாறியிருக்கலாம். ஆனால் ஒருங்கிணைந்த வலிமை மிகுந்த நமது எண்ணம் ஒன்றுதான்; அது ஒருபோதும் மாறாதது. மதவாதப் பாசிச சக்திகளுக்குத் துளியளவும் தமிழ்நாட்டில் இடம்கொடுக்காமல், அந்த பிற்போக்குச் சக்திகளுக்குத் துணை நிற்கின்ற அடிமைக் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக விரட்டி அடிப்பது ஒன்றே தி.மு.கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் ஒற்றை இலக்கு. அந்த ஒற்றை இலக்கினை வென்றெடுக்க 234 வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள். அதில் கழகத்தின் சார்பில் 173 வீரர்கள் நிற்கிறார்கள்.

ADVERTISEMENT

ஒரு கோடிக்கும் அதிகமான தொண்டர்களைக் கொண்ட திமுக எனும் அரசியல் பேரியக்கத்தில், ஏழாயிரத்துக்கும் அதிகமானோர் விருப்பமனு அளித்திருந்தாலும், கழகம் நேரடியாகப் போட்டியிடுகின்ற தொகுதிகள் 173 என்பதால், ஒரு தொகுதிக்கு ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பையும் கொண்டவனாக உங்களில் ஒருவனான நான் இருக்கிறேன். அந்த நெருக்கடி எத்தகைய தன்மையது என்பதை உடன்பிறப்புகளான நீங்களும் அறிவீர்கள்.

கையளவு உள்ளம், கடல் போல் ஆசை என்பதைப் போல, விருப்ப மனு கொடுத்தவர்கள் அத்தனை பேரையும் வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தாலும், தொகுதிகளின் எண்ணிக்கை கையளவு தானே! இதனை உணர்ந்து, என் அன்பு வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, களம் நோக்கி கவனம் செலுத்தி, 234 தொகுதிகளிலும் வெற்றியை ஈட்டிட, அயர்வின்றிப் பணியாற்றிடப் பாசத்துடன் அழைக்கிறேன்.

திமுகழகம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிற தொகுதிகளாக இருந்தாலும், கழகத்தின் சின்னமாம் உதயசூரியனில் தோழமைக் கட்சியினர் போட்டியிடுகின்ற தொகுதிகளானாலும், அவரவர் கட்சிக்குரிய சின்னங்களில் களம் காண்கிற தோழமைக் கட்சியினரின் தொகுதிகளானாலும், அனைத்துத் தொகுதிகளிலும் நமது வேட்பாளர், கருணாநிதி அவர்கள்தான்.  2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவும் அதன் கூட்டாளிகளும் ஒட்டுமொத்தமாக வீழ்த்தப்படவேண்டும். திமுக தலைமையிலான கூட்டணி அனைத்து இடங்களிலும் மகத்தான வெற்றி பெற்று, கழகத்தின் ஆட்சியை தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் காணிக்கையாக்க வேண்டும்.

நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுபோல, இந்தத் தேர்தல் களத்தில் திமுக மகத்தான வெற்றி பெறுவது உறுதி. மக்களின் மனநிலையும் ஆதரவும் அதனை வெள்ளிடை மலை போல் வெளிப்படுத்துகிறது. ஆனால், அந்த வெற்றியை எளிதாக அடைவதற்கு விடமாட்டார்கள். அதிகார பலம் கொண்டவர்கள் அத்தனை தந்திரங்களையும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் செய்வார்கள். அவற்றை முறியடித்திட உங்களில் ஒருவனான நான் என் சக்திக்கு மீறி உழைக்கிறேன். உடன்பிறப்புகளாம் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பையும் ஒத்துழைப்பையும் விரும்பி வேண்டி எதிர்பார்க்கிறேன்.

வெற்றியன்றி வேறில்லை என்கிற ஒருமித்த சிந்தனையுடன் உழைப்போம். மாச்சரியங்களுக்கு இடம்கொடுக்காமல், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வெற்றியினை ஈட்டிடக் களப்பணியாற்றுவோம். வரலாறு போற்றும் வெற்றியை தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நாம் அனைவரும் காணிக்கையாக்குவோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT