தமிழ்நாடு

மாற்றத்துக்கான முழுமையான நோக்கைக்கொண்டது தேசிய கல்விக் கொள்கை: ராம்நாத் கோவிந்த்

DIN

மாற்றத்துக்கான முழுமையான நோக்கத்தைக் கொண்டதாகத் தேசிய கல்விக் கொள்கை 2020 கொண்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம், சேர்காடில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை வைத்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தாமரைச்செல்வி சோமசுந்தரம் ஆண்டறிக்கை வாசித்தார். 

விழாவில் மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியது. 
மனிதக்குலம் முழுமைக்கும் நலம் பயக்கும் அமரத்துவம் வாய்ந்த அறக்கருத்துகளை வழங்கி, துறவு வாழ்க்கை மேற்கொண்ட பெரும் புலவர்களில் ஒருவரான  திருவள்ளுவரின் பெயரைத் தாங்கி நிற்கிறது இப்பல்கலைக்கழகம். அவரது உன்னதமான அறவுரைகளை உள்வாங்கிக்கொள்ள அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அவரது குறட்பாக்கள் அனைவரது கல்வி, வாழ்க்கையில் ஒன்றிணைந்த பகுதியாகும். 

1806-ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய் புரட்சி, இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும். அத்தகைய வேலூரில் நடைபெறும் இவ்விழாவில், தலைமை விருந்தினராகப் பங்கேற்பது எனக்கு கிடைத்த கெளரவமாகும். வேளாண்மையில் உரத்தைப் போல, முற்கால பொறியியல் அற்புதங்களில் ஒன்றான கல்லணையைக் கொண்ட தமிழகம் இலக்கியத்தில் தனித்துவம் பெற்றுள்ளது. உலகின் சிறந்த பாசன முறைக்கு உதாரணமாகப் பழமையான அணைகளில் ஒன்றாக கல்லணை திகழ்கிறது. தஞ்சையில், காவிரி ஆற்றின் குறுக்கே சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட அந்த அணை, பண்டைக்கால சமுதாயத்தினரின் பொறியியல் திறமைக்குச் சான்றாகும். 

அறிவும், அறிவியல் உணர்வும், இந்தப் பிராந்திய மக்களின் உள்ளார்ந்த பண்பாகத் தோன்றுகிறது. தமிழகத்தில் இருந்து வந்தவர்களான கணித மேதை எஸ். ராமானுஜன், நோபல் பரிசு பெற்ற சி.வி.ராமன், எஸ்.சந்திரசேகர் போன்றோர் இக்காரணத்தால்தான் பெரும் புகழ் பெற்றனர். இப்பகுதியைச் சேர்ந்த  புகழ் பெற்றவர்களின் பட்டியல் முடிவில்லாமல் நீளக்கூடியதாகும். இந்தியாவின் ஒரே கவர்னர் ஜெனரல் சி. ராஜகோபாலாச்சாரி, முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஆர்.வெங்கட்ராமன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் இந்த மண்ணின் மைந்தர்கள்.

அறிவுடையோர் மட்டுமே முகத்தில் இரண்டு கண்களைக் கொண்டுள்ளனர், மற்றவர்களுக்கு அவை இரண்டு புண்களே’’, என்பது குறள் விளக்கமாகும். இந்த சமுதாயத்தில் சவால்களைச் சந்தித்து வரும் பிரிவுகளைச் சேர்ந்த பெண்களும் அடக்கம். ஆனால் அத்தகைய தடைகளை உடைத்து நமது பெண்கள் சாதனை புரிந்து வருகின்றனர். இது இந்தியாவின் பிரகாசமான வருங்காலத்தைப் பிரதிபலிக்கிறது. நாட்டின் பெண்கள் கல்வி பெறுகின்ற போது, அவர்களது வருங்காலம் மட்டுமல்லாமல் நாட்டின் வருங்காலமும் பாதுகாக்கப்படுகிறது. 

இந்தியாவின் உயர்கல்வி முறை, கிராமப்பகுதியிலும், ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கும் தொண்டாற்றும் அளவுக்கு விரிவடைந்துள்ளது பெரும் மனநிறைவு அளிக்கும்  விஷயமாகும். இந்த நடைமுறையில், உலகின் மூன்றாவது பெரிய கல்வி முறையாக இது மாறியுள்ளது. இருப்பினும், இதில் மெத்தனத்துக்கு இடமில்லை. உயரிய இடங்களைத் தொடுவதற்கு, நாம் இழந்த காலத்தை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். 
பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே, இந்தியாவில் செழுமையான கல்வி முறை இருந்தது. இதை காந்தியடிகள் "அழகிய மரம்"’ என்று குறிப்பிட்டார். அதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சீர்திருத்தம் என்ற பெயரால் வெட்டித் தள்ளினர். அந்தக் கடுமையான மாற்றங்களால் ஏற்பட்ட நிலையிலிருந்து முழுமையாக விடுபட்டு, நாம் இன்னும் நமது பாரம்பரியத்தை மீட்கவில்லை. 

தேசிய கல்விக் கொள்கை 2020, இந்தத் திசையில் பயணிக்க நன்கு  திட்டமிடப்பட்டு, எடுக்கப்பட்ட உறுதியான முடிவாகும். சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், குழந்தைகளும், இளைஞர்களும் தங்களது தனி வளர்ச்சியின் ஒரு பகுதியாக கல்வியைக் கற்றுக்கொள்ளும் வகையில், மாற்றத்துக்கான முழுமையான நோக்கை இது கொண்டுள்ளது. முடிவில், இது நமது பழமையான பாரம்பரியம், நவீன கற்றல் ஆகியவற்றில் சிறந்தவற்றை, ஒருங்கிணைத்துக் கொண்டுவரும். தார்மீக கல்வி, இந்தியக் கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றை இது வலியுறுத்துவதாக அமையும். இந்தக் கல்வி முறையிலிருந்து வெளி வரும் மாணவர், அதிக தன்னம்பிக்கையுடனும், எதிர்காலத்தில் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தகுதியை உடையவராகவும்  இருப்பர். 

முன்னேற்றமான, தன்னிறைவு கொண்ட, நாட்டுக்கு மிகவும் அவசியமானவற்றை, புதிய கல்விக் கொள்கை கருத்தில் கொண்டுள்ளது. இதற்கு, உயர் கல்வி முறை, சமத்துவமான, நிபுணத்துவம் வாய்ந்த, அதிகாரமளித்தலை வழங்குவதாக இருக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை இந்த நோக்கங்களை அடைவதற்கு முயற்சிக்கிறது. சர். சி.வி.ராமன் குறிப்பிட்டதைப் போல, உயர் கல்வி நிறுவனங்கள், அறிவு விரிவாக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை நோக்கி நாட்டுக்கு வழிகாட்ட வேண்டும். இதுதான், புதிய கொள்கையின் மதிப்புமிக்க உந்துதலாகும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT