தமிழ்நாடு

தேர்தல் பணியில் ஈடுபடுவோர் வாக்களிக்க போதிய அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

10th Mar 2021 04:46 PM

ADVERTISEMENT

 

சென்னை : தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க போதுமான கால அவகாசம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஆகியோர் வாக்களிக்க தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். 

தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஆகியோர் அஞ்சல் வாக்குகளை செலுத்துவதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது. அஞ்சல் வாக்குகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் தேர்தல் பணி தொடர்பான கடைசிக் கட்ட பயிற்சியின் போது வழங்கப்படுகிறது. அந்த வாக்குச்சீட்டில் அதிகாரிகளின் அத்தாட்சி கையொப்பம் பெற வேண்டும். இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் அஞ்சல் வாக்குகள் சில வேளைகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சென்றடைகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின் போது, தேர்தல் பணிகளில் ஈடுபட்ட 4 லட்சத்து 35 ஆயிரத்து 3 அரசு ஊழியர்களில் வெறும் 3 லட்சத்து 97 ஆயிரத்து 697 பேர் தான் அஞ்சல் வாக்கு அளித்தனர். எஞ்சியவர்களால் அஞ்சல் வாக்கு அளிக்க முடியவில்லை. அதிலும் அதிகாரிகளின் அத்தாட்சிக் கையொப்பம் இடம்பெறவில்லை என்ற காரணத்தால் சுமார் 62 ஆயிரம் அஞ்சல் வாக்குகள் நிராகரிக்கப்பட்டு வாக்குகள் வீணானது. 

ADVERTISEMENT

எனவே தேர்தலுக்கு 3 நாள்களுக்கு முன்பாக தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்கவும், இதற்காக சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தனி வாக்குச்சாவடிகளை அமைக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி,  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது  தேர்தல் ஆணையம் தரப்பில், சொந்த தொகுதிக்கு வெளியில் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்க இயலாது. அஞ்சல் மூலம் அவர்கள் வாக்களிக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், போதுமான ஊதியம் இல்லாமல் துணிச்சலாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜனநாயகம் வழங்கியுள்ள முக்கியமான அடிப்படை உரிமையான வாக்குரிமையை மறுக்கக் கூடாது என அறிவுறுத்தினர்.  

அவர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க போதுமான கால அவகாசம் வழங்குவதையும், வாக்களிக்க தவறியவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT