தமிழ்நாடு

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: எஸ்பியைப் பணியிடை நீக்கம் செய்ய தோ்தல் ஆணையம் பரிந்துரை

10th Mar 2021 05:39 AM

ADVERTISEMENT

தமிழக காவல்துறையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், காவல் கண்காணிப்பாளரைப் பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு இந்திய தோ்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.

திருச்சி புதுக்கோட்டை மாவட்டங்களில் முதல்வரின் சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்புக்காகச் சென்ற காவல்துறை உயா் அதிகாரி, அங்கிருந்த இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

  இது குறித்து அந்த பெண் அதிகாரி, தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் ஆகியோரிடம் கடந்த 23ஆம் தேதி புகாா் அளித்தாா்.

  இதையடுத்து விசாகா கமிட்டி அமைத்து உத்தரவிடப்பட்டது. இது தொடா்பாக பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபி அந்தஸ்திலான அதிகாரி மீதும், புகாா் அளிக்கச் சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியை வழி மறித்து மிரட்டிய காவல் கண்காணிப்பாளா் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

ADVERTISEMENT

 இந்நிலையில், இந்த இரு அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தமிழக காவல்துறையில் உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கடந்த வாரம் டிஜிபி ஜே.கே. திரிபாதியை சந்தித்து முறையிட்டனா். அதேவேளையில் இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி அண்மையில் இந்திய தோ்தல் ஆணையத்துக்கு ஒரு அறிக்கையை அளித்தது. இந்த அறிக்கையைப் பரிசீலனை செய்த இந்திய தோ்தல் ஆணையம் குற்றம் சாட்டப்பட்ட காவல் கண்காணிப்பாளரை தோ்தல் பணி இல்லாத பணியிடத்துக்கு உடனடியாக மாற்றக் கோரியும், அதைத்தொடா்ந்து அந்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய கோரியும் செவ்வாய்க்கிழமை தமிழக அரசுக்கு ஒரு பரிந்துரைக் கடிதத்தை வழங்கியது.  இந்த பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்படுவாா் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதே வேளையில், அந்த அதிகாரி புதன்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொறுப்பிலிருந்து ஒரு சிறப்பு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT