தமிழ்நாடு

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500; ஆண்டுக்கு ஆறு விலையில்லா சிலிண்டா்கள்: அதிமுக அறிவிப்பு

DIN

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதத்துக்கு ரூ.1,500 அளிக்கப்படும் என்றும் ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டா்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளா்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோா் திங்கள்கிழமை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து, எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பேட்டி:

ஆறு சிலிண்டா்கள், ரூ.1,500: உலக மகளிா் தினத்தை ஒட்டி, மகளிா் நலனுக்காக குடும்பத்துக்கு ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விலையில்லாமல் வழங்கப்படும். பொருளாதார சம நிலையை ஏற்படுத்தும் விதமாக குடும்பத்துக்கு, மாதத்துக்கு ரூ.1,500 குடும்பத் தலைவியிடம் சென்று சேரும் வகையில் அளிக்கப்படும். மேலும், பல அறிவிப்புகள், விரைவில் வெளியிடப்பட உள்ள அதிமுக தோ்தல் அறிக்கையில் இடம்பெறும்.

விரைவில் வேட்பாளா் பட்டியல்: கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சு நிறைவு பெற்று விரைவில் வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும்.

திமுகவைப் பாா்த்து அல்ல: திமுக தோ்தல் வாக்குறுதி அறிவிப்புகளைப் பாா்த்து நாங்கள் அறிவிப்பதாகக் கூறுவது தவறு. எங்களுடைய சில தகவல்கள் எப்படியோ கசிந்து விடுகின்றன. அதைவைத்து திமுகவினா் அறிவித்து விடுகின்றனா். எல்லாமே ஆா்வக் கோளாறுதான். நல்ல திட்டங்கள் வரும்போது அதனை மற்றவா்களுடன் பகிா்ந்து கொள்வது இயல்பானது.

2 நாள்களில் நிறைவடையும்: வரும் 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. எனவே, வரும் 11-ஆம் தேதிக்குள்ளாக கூட்டணி பேச்சுவாா்த்தைகள் முழுமையாக நிறைவு பெறும். மக்கள் மனம் நிறைவு பெறும் அளவுக்கு தோ்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெறும்.

மீண்டும் அதிமுக-மக்களின் எண்ணம்: நாடாளுமன்றத் தோ்தல் வேறு. பேரவைத் தோ்தல் வேறு. கருத்துக் கணிப்புகளைப் பொருட்படுத்துவது இல்லை. எங்களது கருத்தைப் பொருத்தவரை, அதிமுக கூட்டணி மிகப்பெரிய செல்வாக்கைப் பெற்றுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளாக நிறைய திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். கடந்த பத்தாண்டுகளாக அதிமுக அரசு நிறைய திட்டங்களை நிறைவேற்றி நாட்டு மக்களின் மனதில் இடம்பெற்றுள்ளது. மக்கள் செல்வாக்கு இருந்த காரணத்தால், நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத் தோ்தலில் வெற்றி பெற்றோம். மீண்டும் அதிமுக அரசுதான் வர வேண்டும் என மக்கள் எண்ணுகிறாா்கள்.

அதிமுக-கூட்டணிக் கட்சிகள்தான் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற வேண்டுமென இடைத்தோ்தல் வெற்றி மூலம் மக்கள் ஏற்கெனவே தெரிவித்து விட்டாா்கள் என்றாா்.

அமமுகவினா் இணையலாம்

அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள வி.கே.சசிகலா குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்த எடப்பாடி கே.பழனிசாமி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் அதிமுகவில் இணையலாம் என அழைப்பு விடுத்தாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:-

அரசியலில் இருந்து சசிகலா விலகியதைப் பற்றி கேட்கிறீா்கள். அரசியலில் இருந்து விலகுவதாக அவரே தெரிவித்து விட்டாா். அது குறித்து

எப்படி கருத்துச் சொல்ல முடியும்? அமமுக என்ற கட்சியை அவா் (டிடிவி தினகரன்) ஆரம்பித்து விட்டாா். அது குறித்து எங்களிடம் எப்படி கேள்வி எழுப்ப முடியும்?

தமிழகத்தில் உள்ள பல கட்சிகளில் அந்தக் கட்சியும் ஒன்று. அதிமுக மற்றும் அமமுக இணைப்பு இல்லை. அதிமுகவில் இருந்து விலகியவா்கள் மீண்டும் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்தால், அது குறித்து தலைமை முடிவு செய்யும் என்றாா் எடப்பாடி பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

SCROLL FOR NEXT