தமிழ்நாடு

கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு நாள்: விவசாயிகள் அஞ்சலி

DIN

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என்னும் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக்கின் 110ஆவது நினைவு நாளான செவ்வாய்க்கிழமை விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர்.

18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட வறட்சியால்  மதுரை, ராமநாதபுர மாவட்டங்களில் விவசாயம் சீர்குலைந்தது. விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த  மக்கள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி  புலம் பெயர்ந்தனர். மக்களின் பசி, பஞ்சத்தைப் போக்க, ஆண்ட அரசர்களும், அடுத்துவந்த ஆங்கிலேயர்களும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். 

தமிழகத்தின்  சுந்தர மலையில், சிவகிரி சிகரத்தில் உருவாகி 300 கிலோமீட்டர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வடமேற்காக திசையில் பாய்ந்து, அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் ஆற்றுநீரை தென்தமிழகம் நோக்கி திருப்பி கொண்டுவர இவர்கள் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. சற்றும் தளராது மன உறுதியுடன் போராடி பெரியாற்றில் அணைக்கட்டி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக்.

5 மாவட்ட மக்களின் மனதில் இடம் பிடித்து நீர் இருக்கும் வரை நீவிர் இருப்பீர் என்பது இன்றைக்கும் இப்பகுதியில் உள்ள வாசகமாக உள்ளது. பெரியாறு அணைக் கட்டி முடித்த பென்னிகுயிக்கிற்கு சென்னை மாகான பொதுப்பணித்துறை செயலாளராகப் பதவி உயர்வு கொடுத்தது ஆங்கிலேய அரசு. தொடர்ந்து பென்னிகுயிக் சிறிது காலம் ஹூப்பர்ஹில் - உள்ள ராயல் இந்திய பொறியியல் கல்லூரியின் கடைசி தலைவராகவும், சென்னை பல்கலைக் கழகத்தின் ஆசிரியராகவும் இருந்தார். 

1898-ல் சென்னை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சுகாதார வாரிய தலைவராகப் பதவி வகித்தார். 1899 ஆம் ஆண்டு, பிரிஸ்பேன் நதியின் வெள்ளப்பெருக்கில் ஏற்படும் சேதத்தை தவிர்க்க ஆஸ்திரேலிய அரசு பென்னிகுயிக்கிடம் ஆலோசனை கேட்டது. 1903-ல் தன் குடும்பத்துடன் இங்கிலாந்து சென்றார். அணை கட்ட  தன்குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் விற்ற மா மனிதன் கடைசி காலம் மிக கஷ்டமான காலமாக இருந்தது.

பிரிட்டனில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே வாழும் பகுதியில், சகல வசதியுடன் மாளிகைகளில் வாழ்ந்த பென்னிகுயிக்கின் குடும்பம், முல்லைப் பெரியாறு அணைக்காக செய்த பொருள்செலவுகளால், கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியிருந்தனர். இதனால் மாளிகையில் வாழ்ந்த அவர் கடைசியில் அரசாங்கம் அளித்த தொகுப்பு வீடுகளில் வாழ்ந்தார். 

அங்கு 1911ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி அன்று காலமானார்.  பென்னிகுக் காலமான போது, அவருடைய ஐந்து மகள்களின் மூத்த மகளுக்கு வயது 30. அவருடைய மகனுக்கு வயது 11. ஏழ்மை நிலையில் சுற்றத்தார் யாரும் உதவாததால் அவருடைய மூன்று மகள்களுக்கு திருமணமாகாமல், வாரிசுகள் இல்லாமலே காலமானார்கள். 

ஒரு மகள் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்து ஜெர்மானியர் ஒருவரை மணந்து அங்கேயே நிரந்தரமாக குடியேறினார். அவருடைய ஒரே மகன் ஜான் பென்னிகுவிக் (ஜூனியர்) பிரிட்டனின் உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக பணியாற்றினார்  என்பது வரலாறு.

தற்போது தேனி மாவட்டம் லோயர் கேம்பில் தமிழக அரசு கட்டிய மணிமண்டபத்தில் பென்னிகுயிக்கின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலியை செவ்வாய்க்கிழமை செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT