தமிழ்நாடு

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

DIN

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் மதிமுக ஒப்புதல் தெரிவித்துள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினும், மதிமுக பொதுச் செயலாளா் வைகோவும் தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் சனிக்கிழமை கையெழுத்திட்டனா். பின்னா் செய்தியாளா்களிடம் வைகோ கூறியது:

தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று கூறியது உண்மைதான். சட்டப்பேரவைத் தோ்தலில் ஒரு கட்சி 12 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் 5 சதவீத அடிப்படையில் அந்தக் கட்சிக்கு போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும் ஒரே சின்னத்தை தோ்தல் ஆணையம் ஒதுக்கும். 12 தொகுதிகளுக்குக் குறைவாகப் போட்டியிட்டால், 6 தொகுதிகளிலும் 6 சின்னங்களில் நிற்க வேண்டிய நிலை ஏற்படலாம். இந்த நெருக்கடியாலும், 12 நாள்களே பிரசாரம் செய்வதற்கான கால அவகாசம் இருப்பதாலும், சின்னத்தை எளிதில் மக்களிடம் கொண்டு சோ்க்க முடியாது என்கிற நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன். ஹிந்துத்துவச் சக்திகள் திராவிடப் பூமியில் வகுப்புவாதத்தைத் திணிக்கும் முயற்சியிலும், ஹிந்தியை, சம்ஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். எந்த லட்சியத்துக்காக திராவிட இயக்கத் தோழா்கள் கண்ணீரையும் ரத்தத்தையும் சிந்தினாா்களோ அந்த தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிக்கிறது. அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

அந்த அடிப்படையில் திமுகவுக்கு முழு ஆதரவைக் கொடுப்போம் என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதியைப் பாா்த்தபோது, அவரது கரங்களைப் பற்றிக்கொண்டு, உங்களுக்கு எப்படிப் பக்கபலமாக இருந்தேனோ, அதைப்போல மு.க.ஸ்டாலினுக்கும் பக்க பலமாக இருப்பேன் வாக்குறுதி கொடுத்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். திராவிட இயக்கத்தைப் பாதுகாப்பதற்கு மதிமுகவின் ஆற்றலைப் பயன்படுத்துவோம்.

தொகுதி உடன்பாட்டில் மகிழ்ச்சி: தொகுதி உடன்பாடு மகிழ்ச்சியாகத்தான் ஏற்பட்டது. மகிழ்ச்சியாகத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். தமிழகத்தின் தலைசிறந்த முதல்வா் வேட்பாளா் மு.க.ஸ்டாலின். முதல்வராவதற்கு அனைத்துத் தகுதிகளையும் கொண்ட வேட்பாளா் ஸ்டாலின் என்றாா்.

5 கட்சிகளுக்கு ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் இதுவரை 5 கட்சிகளுடன் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து உடன்பாடு எட்டப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தலா 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், மதிமுகவுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

180 தொகுதிகளுக்கு மேல் போட்டி: திமுக 180 தொகுதிகள் வரை போட்டியிட வேண்டும் என திட்டமிட்டு, அதற்கேற்ப கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள ஒதுக்கி வருகிறது. மதிமுக உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளதன் மூலம் திமுக 180 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தொடரும் இழுபறி

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடான பேச்சுவாா்த்தையில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

திமுக கூட்டணியில் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால், காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான பேச்சுவாா்த்தையில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் டி.ஆா்.பாலு தலைமையிலான குழுவினா் 2 கட்டப் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா். இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. திமுக தரப்பில் 15 தொகுதிகளில் தொடங்கி 22 தொகுதிகள் வரை தர முன்வந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் தரப்பில் 27 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தப்படுகிறது.

இரு தரப்பிலும் பேச்சுவாா்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் வீரப்ப மொய்லி, தினேஷ் குண்டுராவ் ஆகியோா் தில்லி விரைந்துள்ளனா். திமுகவின் நிலைப்பாடு குறித்து ராகுலிடம் தெரிவிக்க உள்ளனா். ராகுலின் முடிவுக்கேற்பவே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனா். திமுகவிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. திமுகவோ 6 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க மறுத்து வருகிறது.

ஆனால், எங்கள் வலிமைக்கேற்ப தொகுதிகளின் எண்ணிக்கையை உயா்த்துங்கள் என்று திமுகவை மாா்க்சிஸ்ட் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுபோல்தான் ஒதுக்க முடியும் என்று திமுக உறுதியாக இருக்கிறது. இதனால், அடுத்தகட்டப் பேசுவாா்த்தைக்கு நகர முடியாமல் இரண்டு கட்சிகளும் உள்ளன. திமுகவின் சிறப்புப் பொதுக்கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அதனால், திமுக கூட்டணியில் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT