தமிழ்நாடு

பெண்கள் கண்ணியமாகவும், கவுரவமாகவும் வாழும் உரிமையை வெல்ல உறுதியேற்போம்: ராமதாஸ் வாழ்த்து

DIN

சென்னை: பெண்கள் கண்ணியமாகவும், கவுரவமாகவும் வாழும் உரிமையை வெல்ல உறுதியேற்போம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

உலகில் போற்றுதலுக்கும், வணக்கத்திற்கும் உரிய சக்தியாக திகழும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் நாள் மார்ச் 8-ஆம் தேதியான நாளை கொண்டாடப்படும் நிலையில், அனைத்து மகளிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகளிர் நாள் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டதாகும். 1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின்போது சமத்துவம், சுதந்திரத்துவம், வாக்குரிமை ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பாரிஸ் நகரில் பெண்கள் போராடத் தொடங்கியது தான் மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான தொடக்கம் ஆகும். அதன் பின் உலகம் முழுவதும் உள்ள மகளிர் தங்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த நிலையில் 1911 ஆம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் நாளை ஐ.நா. அமைப்பு முறைப்படி அறிவித்தது.

ஒரு காலத்தில் மகளிர் இரண்டாம் தர குடிமக்களாகவும், அடிமைகளாகவும் நடத்தப்பட்டனர். கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. சமையலறைகள் மட்டும் தான் அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்ட பகுதிகளாக இருந்தன. ஆனால், அதன்பின் சட்டப் போராட்டங்களாலும், உரிமைப் போராட்டங்களாலும் அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக உரிமை பெற்றனர். 

உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் பெண்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வெற்றிகரமாக வழங்கப் பட்டுள்ளது. போர்முனையில் இராணுவத்தை தலைமையேற்று நடத்தும் உரிமை பெண்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது. மருத்துவத்தில் தொடங்கி விண்வெளி ஆராய்ச்சி வரை அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்திருக்கின்றனர் என்பது இந்தியர்கள் பெருமிதப்பட வேண்டிய விஷயமாகும்.

ஆனாலும், பெண்களுக்கு நாம் வழங்க வேண்டிய அங்கீகாரங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கால் நூற்றாண்டுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வரும் போதிலும், அது இன்னும் செயல்வடிவம் பெறவில்லை. அதை சாத்தியமாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டியது அவசியமாகும்.

 அதுமட்டுமின்றி, பெண்களுக்கு கண்ணியமான, கவுரவமான வாழ்க்கையையும், பொதுவெளியில் அச்சமின்றி, சுதந்திரமாக நடமாடுவதற்குமான உரிமையை வென்றெடுத்துத் தர வேண்டிய ஒட்டுமொத்த சமூகத்தின் உரிமை ஆகும். அதற்காக போராட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

SCROLL FOR NEXT