தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

DIN

தமிழகத்தில் ஏறத்தாழ ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் தினசரி கரோனா பாதிப்பு 500-ஐக் கடந்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை 543 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 225 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

நோய்த் தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காததும், மக்களின் அலட்சியப் போக்குமே இதற்கு காரணம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதே நிலை தொடா்ந்தால் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனா்.

இதனிடையே, மாவட்ட ஆட்சியா்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சுகாதாரத் துறைச் செயலா் சில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நோய்த் தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காதோருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுப்பதை தீா்க்கமாக உறுதி செய்ய வேண்டும். மேலும், கடைகள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் விதிமீறல் நடந்தால், அதன் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று சந்தைகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கடற்கரை மற்றும் சாலையோர சிறு கடைகள், உணவகங்களில், முகக்கவசம், தனிநபா் இடைவெளிகளை மக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கரோனா தொற்று ஏற்பட்டவருடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்துதல் அவசியம். எங்கிருந்து தொற்று பரவியது என்பது குறித்த விவரங்களையும் சேகரிக்க வேண்டும். கரோனா பாதித்தவரின் வீடுகளில் தகரம் அடைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேவேளையில், அப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எச்சரிக்கை வாசகங்கள் ஒட்டுவது மட்டும் போதாது. மாறாக அங்கு மக்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும். சுப நிகழ்ச்சிகள், விடுதிகள், பயிற்சி மையங்களில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அலுவலகங்களில் உடல் வெப்ப நிலை பரிசோதனை கட்டாயம் செய்ய அறிவுறுத்த வேண்டும். ஒருவருக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால், அவருக்கு பரிசோதனை செய்து, தொற்றில்லை என்ற சான்று கொண்டு வந்தால் மட்டுமே, மீண்டும் அலுவலகத்தில் அனுமதிக்க வேண்டும்.

தற்போது, சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே, ‘கோவிட் கோ்’ மையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மாா்ச் மாதம் மிகவும் சவாலானது. இனி வரும் நாட்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT