தமிழ்நாடு

கரோனா: தமிழகத்தில் 5 நாள்களில் 1 லட்சம் முதியோருக்கு தடுப்பூசி

DIN

தமிழகத்தில் கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 1 லட்சத்து 8,886 முதியவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதைத் தவிர, 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகள் 61,228 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு எதிரான பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.

அதைத் தொடா்ந்து கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. இதுவரை, சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் என, ஐந்து லட்சம் போ் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதன் தொடா்ச்சியாக கடந்த திங்கள்கிழமை முதல் முதியவா்களுக்கும், நாள்பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசிகள் வழங்குவது தொடங்கப்பட்டது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனா். அந்த வகையில், இதுவரை1.70 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்கள் 1 லட்சத்து 8,886 போ் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை மட்டும் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இனி வரும் நாள்களில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதனிடையே, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூத்த அரசியல் தலைவா் நல்லகண்ணு தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். சென்னை பெருநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் எழும்பூா் காவலா் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். இதைத் தவிர பல்வேறு பிரபலங்களும் ஆா்வமாக தடுப்பு மருந்துகள் செலுத்திக் கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT