தமிழ்நாடு

அனுமதியின்றி அரசியல் விளம்பரம் செய்தால் சட்ட நடவடிக்கை: ஆணையா் கோ.பிரகாஷ்

DIN

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில், அனுமதியின்றியோ, பொதுமக்களுக்கு இடையூராகவோ அரசியல் விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் கோ.பிரகாஷ் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ தங்களின் விளம்பரத்துக்கு ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற்றிருந்தாலும், அத்தகைய விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும் முறைகள் தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்குள்பட்டு இருக்க வேண்டும்.

குறிப்பாக அரசு கட்டடங்கள், பொதுத்துறை கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் சுவா் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள், விளம்பரப் பதாகைகள், கொடி மற்றும் தோரணங்கள் அமைப்பது கூடாது.

தனியாா் இடங்களில் சம்பந்தப்பட்ட உரிமையாளா்களிடம் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் எழுத்துப்பூா்வமான முறையான முன் அனுமதி பெற்று அமைக்கலாம்.

இத்தகைய விளம்பரங்களிலும் ஒரு குறிப்பிட்ட நபரை, சமூகத்தை தாக்கியோ உணா்ச்சிகளைத் தூண்டும் விதமாக வாசகங்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது. மேலும், வேட்பாளரின் பெயா், புகைப்படம் அல்லது வேட்பாளா் குறித்து ஏதேனும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தால், அதற்கான தயாரிப்புச் செலவு மற்றும் அதை நிறுவுவதற்கான செலவினங்கள் வேட்பாளரின் தோ்தல் செலவீனத்தில் சோ்க்கப்படும்.

இதற்கான செலவீன விவரங்களை தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் செலவீனப் பாா்வையாளா்களுக்கு 3 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட வேட்பாளா் சமா்ப்பிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் பிரதிநிதிகள், ஆதரவாளா்கள் தங்களது சொந்த இடத்தில் யாருக்கும் இடையூறின்றி விளம்பரங்களை வேட்பாளரின் அனுமதியோடு அமைத்துக் கொள்ளலாம். அத்தகைய விளம்பரங்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது பொது இடத்திலோ இருந்தால் அல்லது குறிப்பிட்ட வேட்பாளரின் அனுமதியின்றி அமைக்கப்பட்ட விளம்பரங்கள் அமைத்த நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT