தமிழ்நாடு

சங்ககிரியில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்குப் பயிற்சி

6th Mar 2021 01:24 PM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை  தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சங்ககிரி புதிய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 

சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சங்ககிரி வட்டத்தில் சங்ககிரி, மகுடஞ்சாவடி, தாரமங்கலம் ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது.  

சங்ககிரியில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியரும், சங்ககிரி தொகுதி தேர்தல் அலுவலர் கோ.வேடியப்பன் தலைமை வகித்து தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளவாறு சங்ககிரி சட்டப்பேரவை தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவுக்கு ஏற்றவாறு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்றார். 

ADVERTISEMENT

மேலும் தற்போது தேர்தல் ஆணையம் கூறியுள்ளவாறு சங்ககிரி தொகுதியில் 1935 மாற்றுத்திறனாளிகளும், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5969 பேரும் உள்ளனர். அவர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக படிவம் 12ல் அவர்களிடம் வழங்கி பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலைய கண்காணிப்பாளர் வழியாக உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். 

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாக்காளர்களிடம் அந்தந்த மருத்துவமனை மருத்துவர்களிடம் உரிய படிவத்தினை வழங்கி அஞ்சல் வாக்குகளைப் பெற்று உதவி தேர்தல் அலுவலரிடம் வழங்க வேண்டும், வெளி மாவட்டங்களிலிருந்து இத்தொகுதியில் பணியாற்றும் அரசுப் பணியாளர்கள்  12பி படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும், இதே தொகுதியில் தேர்தல் பணியில் பணியாற்றும் அலுவலர்களுக்கு 12ஏ படிவம் மூலம் அஞ்சல் வாக்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றார். 

சங்ககிரி தொகுதியில் பெயர் சேர்க்க விண்ணப்பித்த 9900 புதிய வாக்காளர்களுக்கு அஞ்சல்துறை மூலம் வாக்காளர் அடையாள அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. அஞ்சலக ஊழியர்களிடம் பேசி அந்தந்த வாக்குச்சாவடி மையத்திற்குப்பட்டவர்களின் பெயர், முகவரிகளைச் சரிபார்த்து அனைவருக்கும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுத்து அதற்கான தினசரி தகவல்களை தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார். 

உதவி தேர்தல் அலுவலர் எஸ்.விஜி, வருவாய்க் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார், சமூகநலத்துறை தனி வட்டாட்சியர் கோவிந்தராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் பி.சிவராஜ், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT