தமிழ்நாடு

திமுகவுடன் கூட்டணி - வேண்டுமா, வேண்டாமா? காங்கிரஸின் குழப்பம்

DIN

திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஒரே குரலில் கூறி வருகின்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் தொகுதிப் பங்கீடு தொடா்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் காங்கிரஸ் இரண்டு கட்டப் பேச்சுவாா்த்தையை நடத்தியது. பல கட்டங்கள் மறைமுகமாகவும், தொலைபேசி வாயிலாகவும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், திமுக - காங்கிரஸ் இடையே எந்த உடன்பாடும் இதுவரை எட்டப்படவில்லை.

காங்கிரஸ் 41 தொகுதிகள் கேட்கத் தொடங்கி, 30 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறது. திமுக தலைமை 15 தொகுதிகளில் தொடங்கி 22 தொகுதிகளில் வந்து நிற்கிறது. மேலும், மாநிலங்களவை உறுப்பினா் பதவி ஒன்றும் தர திமுக முன்வந்துள்ளது.

ஆனால், மாநிலங்களவை உறுப்பினா் பதவியை விட, பேரவைத் தொகுதிகளே முக்கியம் என்று கூடுதல் தொகுதிகளைக் கேட்டு வருகிறது காங்கிரஸ்.

இந்நிலையில் திமுகவுடனான நிலைப்பாடு குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சத்தியமூா்த்திபவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மூத்த தலைவா்கள் வீரப்ப மொய்லி, தினேஷ் குண்டுராவ், சஞ்சய் தத், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி, முன்னாள் தலைவா்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, மாநிலப் பொதுச்செயலாளா் கே.சிரஞ்சீவி, மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசா் உள்பட செயற்குழு உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் வீரப்பமொய்லி பேசும்போது, ‘திமுகவுடன் பல ஆண்டுகளாகக் கூட்டணி வைத்துள்ளோம். ஆனால், காங்கிரஸுக்கு திமுக மரியாதை கொடுக்க மறுக்கிறது. காங்கிரஸை குறைத்து மதிப்பிட வேண்டாம். காங்கிரஸ் தேசியக் கட்சி. இரண்டு நாள்களாக தமிழக காங்கிரஸாரின் கருத்துகளைக் கேட்டு வருகிறோம். உங்கள் கருத்தின் அடிப்படையில்தான் முடிவு எடுப்போம். காங்கிரஸின் மரியாதையை என்றைக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்றாா்.

கே.எஸ்.அழகிரி கண்ணீா்: கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசும்போது, ‘பாரம்பரியமிக்கது காங்கிரஸ் கட்சி. திமுகவுக்குத் தேவையான நேரத்தில் உதவுகிறோம். ஆனால், காங்கிரஸை திமுக அவமதிக்கிறது. தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்கு அறிவாலயம் சென்றோம். தனிப்பட்ட அழகிரிக்கு மரியாதை கொடுக்கத் தேவையில்லை. காங்கிரஸ் தலைவா் என்ற முறையில் எனக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா? குறைவான தொகுதிகள் கொடுத்து அவமதிக்கிறாா்கள். மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு காங்கிரஸால் பிரச்னை வந்துவிடக் கூடாது என்று பொறுமையாகக் கேட்டுக் கொண்டோம்.

திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது: 1980-இல் திமுகவிடம் இருந்து 50 சதவீத தொகுதிப் பங்கீடு கிடைத்தது. இப்போது 10 சதவீதம்கூட கிடைக்கவில்லை. திமுக வாக்கு சதவீதம் 37 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதைப்போல திமுகவின் பலமும் குறைந்துள்ளது. திமுகவும் வளா்ந்துவிடவில்லை. காங்கிரஸும் தேய்ந்துவிடவில்லை. ஆனால், அவமதிக்கிறாா்கள் என்று கூறி எல்லோா் முன்னிலையில் கண்ணீா் சிந்தியுள்ளாா். இதனால், செயற்குழுவில் பங்கேற்ற அனைவரும் உறைந்து போய் உள்ளனா்.

காங்கிரஸின் மூத்த தலைவா் வருத்தம்: முதல் கட்டப் பேச்சுவாா்த்தைக்காக காங்கிரஸின் மூத்த தலைவா் உம்மன் சாண்டி அறிவாலயத்துக்கு வந்தாா். அப்போது மு.க.ஸ்டாலின் பேச்சுவாா்த்தை நடத்த வராமல் துரைமுருகனை அனுப்பி வைத்தாா். துரைமுருகனும் தாமதமாக வந்து அவா்களை அலட்சியமாகக் கையாண்டுள்ளாா். இதனால், உம்மன் சாண்டி வருத்தம் அடைந்துள்ளாா். இது தொடா்பாக காங்கிரஸின் அகில இந்திய தலைமைக்கு அவா் புகாா் தெரிவித்ததுடன், அதற்குப் பிறகு பேச்சுவாா்த்தைக்கும் வர மறுத்துவிட்டாா்.

கூட்டணி வேண்டாம்: 22 தொகுதிகளுக்கு மேல் தரமாட்டோம். அதை ஏற்றுக்கொண்டால் கூட்டணியில் இருங்கள் என்பதுபோல காங்கிரஸுக்கு திமுக தலைமை உறுதியாகத் தெரிவித்துவிட்டது.

இது தொடா்பாக காங்கிரஸ் தலைமை, நிா்வாகிகளோடு ஆலோசனை நடத்தியது. மாவட்ட நிா்வாகிகள் ஒவ்வொருவராக வியாழக்கிழமை அழைத்து கருத்துக் கேட்கப்பட்டது. அதைப்போல செயற்குழுக் கூட்டத்திலும் வெள்ளிக்கிழமை கருத்துக் கேட்டனா். இரண்டு கூட்டங்களிலும் குறைவான தொகுதிகள் கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றே எல்லோரும் கருத்து கூறியுள்ளனா்.

முடிவு எடுக்க முடியாமல்...: இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மகளிா் அணியினா் திமுக குறைவான தொகுதி கொடுப்பதால், அதோடு கூட்டணி வைக்க வேண்டாம் என்று சத்தியமூா்த்தி பவனுக்கு எதிரில் வெள்ளிக்கிழமை சாலை மறியலிலும் ஈடுபட்டனா். இதனால், என்ன முடிவு எடுப்பது எனத் தெரியாமல் காங்கிரஸ் தலைமை தவித்து வருகிறது.

தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல்...: காங்கிரஸின் செயற்குழுக் கூட்டத்துப் பிறகு செய்தியாளா்களிடம் கே.எஸ்.அழகிரி பேசும்போது, தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் முடிவு எடுப்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT