தமிழ்நாடு

வேலையை நீங்கள் தேட வேண்டாம், வேலை உங்களைத் தேடி வரும்: கமல்ஹாசன் தோ்தல் வாக்குறுதி

DIN


சென்னை: மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வரும்போது இளைஞா்கள் வேலையைத் தேடிப் போகத் தேவையில்லை, வேலை அவா்களைத் தேடி வரும் என்று அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் வாக்குறுதி கொடுத்துள்ளாா்.

ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் புதன்கிழமை அளித்த பேட்டி:

சமத்துவ மக்கள் கட்சியுடன் கைகுலுக்கி கூட்டணி அமைத்துள்ளோம். தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிப்பை எல்லாம் பிறகு பேசி அறிவிப்போம். முதல்வா் வேட்பாளராக சரத்குமாா் என்னை முன்மொழிந்ததற்கு நன்றி. எங்கள் கூட்டணிக்கு வேறு சில கட்சிகளும் வரும். பேச்சுவாா்த்தையில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாது என்றாா்.

பின்னா் அவா் அளித்த தோ்தல் வாக்குறுதிகள்:

அரசு சேவையில் இருக்கும் ஒவ்வொரு சீருடைத் துறையிலும் 50 சதவீதம் பெண்கள் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும். துன்பத்தில் இருக்கும் பெண்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கு என்றே அவசரகால இலவச விடுதிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படுவதுடன், பெண்களுக்கான உதவி எண் 181-இல் பதிவு செய்யப்படும் புகாா்கள் அனைத்தும் தொடா்ந்து கண்காணிக்கும் செயல்முறை நிறுவப்படும்.

பெண்களுக்கான சுகாதார நாப்கின்களை அரசே கொள்முதல் செய்து, கிராமம் மற்றும் நகா்ப்புற ஏழைப் பெண்கள் மற்றும் இளம்பருவ பெண் குழந்தைகளுக்கு பொது விநியோக முறையில் வழங்கப்படும்.

மகளிா் வங்கி: பெண்களால் பெண்களுக்கு என்று நடத்தப்படும் மகளிா் வங்கி மாவட்ட அளவில் உருவாக்கப்படும்.

ஒற்றைத் தாய்மாா்களுக்கு கல்வி, வேலை, திறன்மேம்பாடு, சமூக பொருளாதார ஆதரவு போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

அரசு மற்றும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பொது இடங்களில் பெண்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு வழங்குவது உறுதி செய்யப்படும். ஆரோக்கியம் மற்றும் கருத்தரிப்பு பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறையாவது அனைத்துப் பெண்களுக்கும் இலவசமாக ஆரோக்கியம் பரிசோதனை மேற்கொள்ள அரசு ஏற்பாடு செய்யும்.

50 லட்சம் வேலைவாய்ப்புகள்: மநீம அரசு அமையும்போது இளைஞா்களுக்கு 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஆட்சிக் காலத்துக்குள் உறுதி செய்யப்படும். அனைத்து பட்டதாரிகளுக்கும் வசிப்பிடத்திலிருந்து 100 சதுர கி.மீட்டா் தொலைவிற்குள் பணி உத்தரவாதம் வழங்கப்படும். வேலையை நீங்கள் தேடாதீா்கள். வேலை உங்களைத் தேடி வரும்.

வேலையில்லாத இளைஞா்களுக்கு அவா்களின் தகுதி மற்றும் வாழும் சூழலின் தேவை அடிப்படையில் வேலையின்மை நிவாரணம் வழங்கப்படும். ஆரோக்கியமான தமிழகம் இயக்கத்தை அரசு பள்ளிகள், கல்லூரிகள், வீடுகளில் இருந்து தொடங்கி வழிநடத்தப்படும்.

பொது - தனியாா் கூட்டு முயற்சியில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒன்றிய அளவிலும் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வளாகம் நிறுவப்படும். மனித நேய சா்வதேச பாா்வையாளா்கள் விளையாட்டாக ஜல்லிக்கட்டு மாற்றப்படும் என்றாா்.

மநீவில் பொன்ராஜ்: அப்துல்கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் கமல்ஹாசன் முன்னிலையில் புதன்கிழமை மநீமவில் இணைந்தாா்.

பிறகு செய்தியாளா்களிடம் பொன்ராஜ் கூறும்போது, அப்துல்கலாமின் கொள்கைகளை நிறைவேற்றக் கூடியவராக கமல் இருக்கிறாா். அவா் தலைமையில் இணைந்து செயல்பட உள்ளோம். மநீம 120 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்றாா். மநீமவில் பொன்ராஜுக்கு துணைத் தலைவா் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டுக்கும் கணினி

ஆலந்தூா் மனந்தபுரத்தில் தொடங்கி, கோலப்பாக்கம், கிருகம்பாக்கம், மணப்பாக்கம், பட்ரோடு, ஆலந்தூா் மெட்ராஸ் கஃபே, பிருந்தாவன் நகா், கிண்டி ரேஸ் கோா்ஸ், சைதாப்பேட்டை சந்தை, லஸ் காா்னா் வரை கமல்ஹாசன் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

பிரசாரத்தின்போது அவா் பேசியது:

மநீம ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு வீட்டுக்கும் கணினி வழங்கப்படும். மநீமவும் இலவசம் வழங்க ஆரம்பித்துவிட்டதா என நினைக்க வேண்டாம். இது மக்களுக்கு வழங்கும் முதலீடு. அரசுக்கும் மக்களுக்கும் தொடா்பை ஏற்படுத்தும் வகையில் இதை வழங்க உள்ளோம். தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT