தமிழ்நாடு

சசிகலா அரசியலில் இருந்து விலகியதிற்கு பின்னால் பாஜகவின் பங்கு இருக்கிறது: சீதாராம்யெச்சூரி பேட்டி

4th Mar 2021 01:49 PM

ADVERTISEMENT

கோவை: சசிகலா அரசியலில் இருந்து விலகியதிற்கு பின்னால் பாஜகவின் பங்கு இருக்கிறது. இது பாஜகவிற்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு பாஜக சொல்வதை கேட்டுதான் செயல்படுகிறது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற, மக்களின் நலனுக்காக தான் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறோம். சி.பி.எம் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை பொறுத்து பிற மாநிலங்களில், பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

ADVERTISEMENT

சசிகலா அரசியலில் இருந்து விலகியதிற்கு பின்னால் பாஜகவின் பங்கு இருக்கிறது. இது பாஜகவிற்கு மகிழ்ச்சி அளிக்கும். 

கேரளா அரசு புதிய வேளாண் சட்டங்களை நிராகரித்துள்ளது. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஆளும் அரசு அதனை ஆதரிக்கிறது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

நாடாளுமன்றத்தில் எங்களது எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். அதற்காக நாங்கள் கவலைப்படுவதில்லை. எங்கள் நோக்கம் மக்களுக்காக போராடுவது. களத்தில் என்றுமே நாங்கள் இருப்போம். நாட்டிற்கும் மக்களுக்கும் எதிராக நடக்கும் நிகழ்வுகளை எதிர்த்து நாங்கள் என்றுமே குரல் கொடுப்போம்.

பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடியின் விளம்பர போஸ்டர்கள் உள்ளது. ஆனால் அதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை. மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து விளக்கம் கேட்டுள்ளேன்.  பாஜகவின் தலைவர்கள் அதிகமாக பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தான் 8 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதியோர்களுக்கு தபால் வாக்கு வழங்கப்பட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால் தபால் வாக்குகளில் முறைகேடுகள் நடக்கக்கூடாது. தேர்தல் ஆணையம் அதனை பார்த்து விசாரித்து கொடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் நீதிபதிகளை விமர்ச்சிப்பது தவறு. ஆனால் தீர்ப்புகள் மீது கருத்துகளை தெரிவிக்கலாம் என்றார்.

இந்த சந்திப்பின் போது உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Sasikalas withdrawal politics Sitaram Yechury
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT