தமிழ்நாடு

சேந்தமங்கலம்: 100 ஆண்டுகள் பழமையான பஜனைகோயில் இடித்து அகற்றம் 

4th Mar 2021 03:30 PM

ADVERTISEMENT

 

சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான பஜனை கோயிலை அப்பகுதி பொதுமக்கள்  இடித்து அகற்றியுள்ளனர். இதுகுறித்து அறநிலையத்துறை சார்பில் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குள்பட்ட சேந்தமங்கலம் பகுதியில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் நூறு ஆண்டுகள் பழமையான பஜனை கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் பழமையான கோயில் என்பதால் இக்கோயில் சிதிலமடைந்து காணப்பட்டு வந்தது. 

ADVERTISEMENT

இதையடுத்து இந்த கோயிலை இடித்துவிட்டு புதிதாக கோயில் கட்ட முடிவெடுத்த அப்பகுதி பொதுமக்களில் ஒரு பிரிவினர் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரின்  கணவர் இன்பசேகரனின் தலைமையில் கடந்த புதன்கிழமை பஜனை கோயிலை இந்து அறநிலையத்துறையின் அனுமதியின்றி இடித்து அகற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கோயில் இடிக்கப்பட்டது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வியாழக்கிழமை அறநிலையத்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதில் நூறு ஆண்டுகள் பழமையான கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து கோயிலை அறநிலையத்துறையின் அனுமதியின்றி இடித்ததாக சேந்தமங்கலம் கிராம பொதுமக்கள் மீது அறநிலையத்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT