தமிழ்நாடு

மயிலாடுதுறை: சாலைப் பணியை முடிக்க அதிகாரிகள் உத்தரவாதம்; போராட்டம் வாபஸ்

4th Mar 2021 03:24 PM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை மாப்படுகையில் சாலைப் பணியை பாதியில் நிறுத்திச்சென்ற ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை நடத்துவதாக அறிவித்திருந்த சாலை மறியல் போராட்டம் அதிகாரிகளின் எழுத்துபூர்வமான உத்தரவாதத்தைத் தொடர்ந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

மயிலாடுதுறை ஒன்றியம் மாப்படுகை ஊராட்சி அவையாம்பாள்புரத்தில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டம் 2020-2021ன் கீழ் 1.5 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உள்புறச் சாலைகளை புதியதாகப் போடுவதற்கான பணியை துவங்கி, ஏற்கெனவே இருந்த சாலையை முழுவதுமாக கொத்தியுள்ளனர். ஆனால், ஒரு மாதத்தைக் கடந்தும் ஒப்பந்தக்காரர் கார்த்திகேயன் என்பவர் சாலை அமைக்கும் பணியை துவக்கவில்லை.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மக்கள் நடக்கமுடியாத அளவுக்கு மிக மோசமான நிலையில் வேலையை பாதியிலேயே நிறுத்திச்சென்ற ஒப்பந்தக்காரரை கருப்புப் பட்டியலில் இணைத்து, நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தியும், நிறுத்தப்பட்ட சாலைப் பணியை உடனே துவக்க உத்தரவிடக் கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக மாப்படுகை சாலையில் குவிந்தனர். 

ADVERTISEMENT

தகவலறிந்த மயிலாடுதுறை ஒன்றிய ஆணையர் ரெஜினாமேரி, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி, ஒன்றிய பொறியாளர் தெய்வானை உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்விடத்துக்குச் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் எஸ்.துரைராஜ், எம்.மணி, சி.மேகநாதன், டி.துரைக்கண்ணு, விவசாயி ஏ.ராமலிங்கம் ஆகியோரிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். 

முடிவில், வரும் புதன்கிழமைக்குள் சாலை அமைக்கும் பணியை துவக்கி விரைந்து முடித்துத் தருவதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT