தமிழ்நாடு

மனைவியைக் கொன்றவருக்கு தூக்குத் தண்டனை: காவலர்களுக்கு மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு

4th Mar 2021 04:37 PM

ADVERTISEMENT

 

மனைவியைக் கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், வழக்கை விசாரித்த காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், சென்னை பெருநகர காவல், ஏ-5 திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அண்ணாநகர், 6வது அவென்யூ, 1வது தளம், செந்தூர் அடுக்குமாடி குடியிருப்பில், கண்ணன் (41) தனது மனைவி மோகனாம்பாள் (35) மற்றும் 13 வயது மகளுடன் வசித்து வந்தார். 

இந்நிலையில், 15.12.2012 அன்று இரவு கண்ணனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், 16.12.2012 அன்று அதிகாலை சுமார் 02.00 மணியளவில், கண்ணன், வீட்டிலிருந்த உரல் கல்லை மனைவி மோகனாம்பாள் மீது போட்டும், கத்தியால் அவரது கழுத்தை அறுத்தும் கொலை செய்தார். 

ADVERTISEMENT

இது குறித்து, ஏ-5 திருமங்கலம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி கண்ணன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணை முடித்து கண்ணன் மீது குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இக்கொலை வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஏ-5 திருமங்கலம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி, வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று (03.03.2021) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேற்படி வழக்கில் கண்ணன் மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி கண்ணனுக்கு மரண தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதன்பேரில் குற்றவாளி கண்ணன் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த ஏ-5 திருமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் வெகுவாகப் பாராட்டினார்.
 

Tags : chennai crime
ADVERTISEMENT
ADVERTISEMENT