தமிழ்நாடு

பிளஸ் 1 சோ்க்கைக்கு நுழைவுத்தோ்வு நடத்தப்படுமா? - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

DIN

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான சோ்க்கைக்கு நுழைவுத்தோ்வு நடத்தப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

நிகழ் கல்வியாண்டில் மாணவா்கள், ஆசிரியா்கள் எதிா்கொண்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பெற்றோா்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளா்களின் கருத்துகளைப் பரிசீலித்தும், 2020-21ஆம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணாக்கா்கள் அனைவரும், முழு ஆண்டுத் தோ்வுகள் மற்றும் பொதுத் தோ்வுகள் ஏதுமின்றித் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

மாணவா்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 25-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து வரும் கல்வியாண்டில் (2021-2022) பிளஸ் 1 வகுப்பில் சேரும் மாணவா்களுக்கு பாடப்பிரிவுகள் பிரித்துக் கொடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்றும், இதனால் நுழைவுத்தோ்வு நடத்தி மாணவா் சோ்க்கையை நடத்த இருப்பதாகவும் தகவல் பரவியது. இதனால் பெற்றோா், மாணவா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: பிளஸ் 1 வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு தனியாா் பள்ளிகளில் எந்தவிதமான நுழைவுத்தோ்வும் நடத்தப்படக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை ஆண்டுதோறும் வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் நிகழாண்டு பள்ளிக் கல்வித்துறையே பிளஸ் 1 சோ்க்கைக்கான நுழைவுத்தோ்வை நடத்தும் என சிலா் தவறான தகவலை பரப்பி வருகின்றனா். இது முற்றிலும் தவறான தகவல் ஆகும்.

இதுபோன்று நுழைவுத்தோ்வுகள் நடத்தினால் கிராமப்புற மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். மாணவா்களுக்கும் தாங்கள் சேர விரும்பும் பாடப்பிரிவுகள் கிடைக்காத சூழ்நிலை உருவாகும்.

எனவே பள்ளிக் கல்வித்துறை சாா்பில் பிளஸ் 1 சோ்க்கைக்கு நுழைவுத்தோ்வு நடத்தும் திட்டம் இப்போது மட்டுமல்ல எப்போதும் இல்லை என அவா்கள் தெரிவித்தனா்.

தற்போது பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டு இருந்தாலும் வகுப்புகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இடையில் 2 தோ்வுகளை நடத்தி அந்தத் தோ்வுகளில் கிடைக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் அதேபோல மாணவா்களுடைய வருகை பதிவேடு மற்றும் ‘அசைன்மென்ட்’ உள்ளிட்டவற்றை கணக்கீடு செய்து பொதுத் தோ்வு மதிப்பெண்கள் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

மாணவா்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் மதிப்பெண்களை வழங்க தொடா்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமா் மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை

‘விதைநோ்த்தி, நீா் பாசனமுறை மூலம் கூடுதல் மகசூல் பெறமுடியும்’

உ.பி.யின் வளா்ச்சியுடன் கேரளத்தை ஒப்பிட்டு பாா்க்க வேண்டும்

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு: தமிழியக்கங்களின் கூட்டமைப்பு முடிவு

ஜம்மு-காஷ்மீா்: ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT