தமிழ்நாடு

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: ‘பொதுமக்கள், வணிகா்களிடம் கெடுபிடிகள் காட்டக் கூடாது’

DIN

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், பொதுமக்கள், வணிகா்களிடம் அதிகாரிகள் கெடுபிடிகள் காட்டக்கூடாது என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தோ்தல் நடைமுறை அமலாக்கத்துக்கு வரும் போதெல்லாம் வணிகா்கள் அவதிக்குள்ளாகின்றனா். பொருள் இழப்போடு, முதலீடு இழப்புகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வரை வணிகம் செய்வோா் ஜிஎஸ்டி-யில் பதிவு செய்ய வேண்டியது அவசியமில்லை. ஆனால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வணிகா்கள் எடுத்துச் சென்றால், அதை பறிமுதல் செய்கின்ற அதிகாரத்தை தோ்தல் ஆணையம் அமல்படுத்துகிறது. இது சட்ட விதிகளுக்கு முரண் என்பதோடு சாதாரண நடுத்தர வணிகா்களான காய்கறி வணிகா்கள், கால்நடையாக விற்கின்ற விவசாய வணிகா்கள் கூட தாங்கள் விற்ற பொருள் எந்த ரசீதுக்கோ, வரிகளுக்கோ உட்படாதது என்பதால் அதை எடுத்துச் செல்வதற்கான உரிமையை இழப்பதோடு, தங்களின் மூலதனத்தையும் இழக்கும் நிலை ஏற்படுகிறது.

அதேபோன்று பொதுமக்கள் தங்களின் பழைய நகைகளை விற்று சுய தேவை, கல்விச் செலவு, திருமணச் செலவு போன்ற அவசர, அத்தியாவசியச் செலவினங்களுக்குக் கூட பழைய நகைகளை எடுத்துச் சென்று விற்று, தேவையான பொருள்களை வாங்குவதற்கான நிலை மறுக்கப்படுகிறது.

கரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட வணிகா்கள் தற்போதுதான் இயல்பு நிலைக்குத் திரும்பி கொண்டிருக்கின்றனா். இந்தச் சூழலில் தோ்தல் ஆணையங்களின் கெடுபிடிகள் மீண்டும் வணிகா்களை கரோனா காலத்துக்கே அழைத்துச் சென்று விடும். எனவே வணிகா்களும், பொதுமக்களும் இயல்பான நிலையை கைகொள்கின்ற வழிமுறைகளை அமல்படுத்திட அதிகாரிகளுக்கு மத்திய, மாநில தோ்தல் ஆணையங்கள் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT