தமிழ்நாடு

புதுவையில் மதிய உணவுத் திட்டம் மீண்டும் தொடக்கம்: ஆளுநர் நேரில் ஆய்வு

3rd Mar 2021 04:15 AM

ADVERTISEMENT

புதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது. அரசுப் பள்ளியில் மதிய உணவை சாப்பிட்டுப் பார்த்து, உணவின் தரத்தை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
 கரோனா பரவலையடுத்து, புதுவை மாநிலத்தில் கடந்தாண்டு மார்ச் 25-ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. பொது முடக்கத் தளர்வுகளுக்குப் பிறகு, அக்.8-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது, 9 முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு பகுதி நேரமாக வகுப்புகள் நடைபெற்றன.
 இதைத் தொடர்ந்து, கடந்த ஜன.4-ஆம் தேதி முதல் அனைத்துவித பள்ளிகளும் திறக்கப்பட்டு, 1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஜன.18-ஆம் தேதியிலிருந்து 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு காலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 12.30 மணி வரை என அரை நாள் பள்ளிகள் நடைபெற்று வருகின்றன.
 பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்தாண்டு மார்ச் மாதம் கரோனா பொது முடக்கத்தையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டபோது நிறுத்தப்பட்டிருந்த காலையில் பால், சிற்றுண்டி, மதிய உணவு வழங்கும் திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படவில்லை.
 இந்தத் திட்டங்களை மீண்டும் செயல்படுத்தக் கோரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அண்மையில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
 புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதேபோல, காலையில் பாலும் வழங்கப்பட்டது.
 சாப்பிட்டுப் பார்த்து ஆய்வு: புதுச்சேரி அருகே மதகடிப்பட்டு கலித்தீர்த்தாள்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நேரில் சென்று, அங்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டுப் பார்த்து, அதன் தரத்தை ஆய்வு செய்தார்.
 பிறகு, அங்குள்ள சமையலறையில் சத்துணவுக்குத் தேவையான அரிசி, பொருள்கள் இருப்பு நிலவரத்தை பார்வையிட்டார். மேலும், சமையலறையை தூய்மையாகப் பராமரிக்கவும் அறிவுறுத்தினார்.
 அப்போது, ஆளுநரின் ஆலோசகர்கள் சி.சந்திரமெளலி, ஏ.பி.மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT