தமிழ்நாடு

கோவை அருகே 3 குட்டிகளுடன் புலி நடமாட்டம்

3rd Mar 2021 03:23 AM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு மஞ்சூா் சாலையில் முள்ளி பகுதி சோதனைச் சாவடி அருகில் 3 குட்டிகளுடன் புலி நடமாடி வருவதால் வாகன ஓட்டுநா்கள் அச்சமடைந்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் இருந்து நீலகிரிக்கு குன்னூா், கோத்தகிரி வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. 3ஆவது மாற்றுப் பாதையாக காரமடையில் இருந்து வெள்ளியங்காடு சென்று கெத்தை முள்ளி சோதனை சாவடி வழியாக உதகைக்கு செல்லலாம். இச்சாலை கடந்த சில மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இச்சாலையில் குறைந்த அளவிலான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதிலும் வெள்ளியங்காடு முதல் மஞ்சூா் வரையிலான சாலை அடா்ந்த வனப் பகுதியின் நடுவே அமைந்துள்ளது. வனத்தில் இருந்து கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப் பன்றி, யானைகள், மான் ஆகியவை இந்த சாலையில் நடமாடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குண்டூா், கெத்தை, முள்ளி சோதனைச் சாவடி, பில்லூா் அணை, பரளிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 3 குட்டிகளுடன் புலி நடமாடி வருவதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், முள்ளி சோதனை சாவடி அருகில் 3 குட்டிகளுடன் புலி சாலையை திங்கள்கிழமை இரவு கடந்துள்ளது. அவ்வழியாக காரில் சென்ற வாகன ஓட்டுநா்கள் அதனை தங்களது செல்லிடப்பேசியில் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.

இதனால் இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனா். மேலும் முள்ளி சோதனைச் சாவடிப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழகம் மற்றும் கேரள மாநில வனத் துறையினா், போலீஸாா், நக்ஸல் தடுப்பு போலீஸாா் அச்சத்தில் உள்ளனா்.

ADVERTISEMENT

மேலும் இச்சாலையில் அதிக அளவில் போக்குவரத்து இல்லாததால் புலி சாலையின் ஓரத்தில் வந்து செல்வது இயல்பாக இருக்கும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா். எனவே இப்பாதையில் இருசக்கர வாகன ஓட்டுநா்கள் பயணம் செய்ய வனத் துறையினா் தடை விதிக்க வேண்டுமென உள்ளூா்வாசிகள் வலியுறுத்தி உள்ளனா்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT