தமிழ்நாடு

ஆலோசனைக்கு மேல் ஆலோசனை; குழப்பத்துக்கு மேல் குழப்பம்

3rd Mar 2021 04:24 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

அதிமுகவும் திமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசனைக்கு மேல் ஆலோசனை நடத்தி வருகின்றன. ஆனால், அதில் இரு கட்சிகளின் கூட்டணிகளிலும் குழப்பங்களுக்கு மேல் குழப்பங்கள்தான் அதிகரித்து வருகின்றன.

அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. அதிமுகவுடன் பாஜக மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதில் 24 தொகுதிகள் வரை பாஜகவுக்கு ஒதுக்க அதிமுக முன் வந்துள்ளது. இதை பாஜக ஏற்றுக்கொண்டாலும் எந்தெந்த தொகுதிகள் என்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

அதிமுகவுக்குச் செல்வாக்கு உள்ள மேற்கு மாவட்டங்களில் பாஜக அதிக இடங்களைக் கேட்டு வருகிறது. இதில் இரு கட்சிகளும் ஒருமித்த முடிவுக்கு வர முடியாமல் உள்ளன.

 அதிமுகவும் தேமுதிகவும் மூன்று கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதற்கு நிகராக தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தி வருகிறது.

ADVERTISEMENT

ஆனால், அதிமுக 14 தொகுதிகளுக்கு மேல் தர மறுத்து வருகிறது. அதுபோல ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் தேமுதிக கேட்கிறது.

கடந்த காலங்களில் அதிமுக ஆதரவுடன் பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளனர்.

அதைப்போல அதிமுகவின் ஆதரவுடன் எல்.கே.சுதீஷை மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் நினைக்கிறார். இதை அதிமுக ஏற்காததால் அந்தக் கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு எளிதாக முடிவடைவதுபோல ஆரம்பத்தில் ஒரு தோற்றம் இருந்தது. ஆனால், திமுக கூட்டணியிலும் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

திமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகள் தரப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டு வருகிறது. ஆனால், திமுகவோ 20 தொகுதிகளுக்கு மேல் தர மறுத்துவிட்டது. இரண்டு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படவில்லை.

திமுக தரப்பில் காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருகிறேன் என ஆசை காட்டியும், எங்களுக்கு அந்தப் பதவி வேண்டாம், தொகுதிகளை மட்டும் கூடுதலாக ஒதுக்கித் தாருங்கள் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்படவில்லை. திமுக - அதிமுக என இரு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்த காலங்களில் எல்லாம் 12 தொகுதிகளுக்கு குறையாமல் பெற்றுத்தான் மார்க்சிஸ்ட் தேர்தலைச் சந்தித்துள்ளது. அந்த அடிப்படையில் இந்த முறையும் 12 தொகுதிகளுக்குக் குறையாமல் கொடுக்க வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் உறுதியாக இருக்கிறது. ஆனால், இதை திமுக ஏற்காததால் மார்க்சிஸ்ட் மிகுந்த அதிருப்தியில் இருந்து வருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் 10 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறது. ஆனால், 5 தொகுதிகள் வரையே ஒதுக்க தி.மு.க. முன்வந்துள்ளது; அந்தக் கட்சியும் அதிருப்தியில் இருந்து வருகிறது.

மதிமுகவுடன் இரண்டு கட்டப் பேச்சுவார்த்தையை திமுக முடித்துள்ளது. மதிமுக தரப்பில் 12 தொகுதிகள் வரை ஒதுக்கவேண்டும் என்றும், தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் எனவும் கூறி வருகின்றனர்.

ஆனால், மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. அதைப்போல இந்தத் தேர்தலிலும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று திமுக வலியுறுத்துகிறது.

மேலும், மதிமுகவுக்கு 5 தொகுதிகள் வரை மட்டுமே திமுக ஒதுக்க முன் வந்துள்ளது. இது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. மதிமுக அலுவலகமான தாயகத்தில் வைகோவை திமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.

திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்றும் தலித் தொகுதிகள் மட்டுமல்லாமல் பொதுத் தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரி வருகிறது. ஆனால், திமுகவோ 5 தொகுதிகளுக்கு மேல் தர மறுக்கிறது.

அதைப்போல பொதுத் தொகுதியும் ஒதுக்க மறுத்து வருகிறது. இதனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதிருப்தியில் இருந்து வருகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,
 'கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம்' என்று திமுகவுடனான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எல்லாம் 5 ஆண்டுகளாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தவை. ஆனால், அந்தக் கட்சிகளே திமுகவுடன் உடன்பாட்டை எட்டமுடியாத நிலையில் இருந்து வருகின்றன. ஆலோசனைக்கு மேல் ஆலோசனை நடைபெற்றாலும், குழப்பங்களுக்கு மேல் குழப்பங்கள்தான் அதிகரித்து வருகின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT