தமிழ்நாடு

திருவாரூரில் மார்ச் 25-ஆம் தேதி ஆழித்தேரோட்டம்

2nd Mar 2021 10:26 AM

ADVERTISEMENT

 

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்ஸவ பெரிய கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் மார்ச் 25 இல் நடைபெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தலங்களில் தலைமையானதாகும். மேலும், தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறும். நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான பெரியக் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, கொடியேற்றத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு குண்டையூரிலிருந்து பூதகணங்கள் நெல் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல், மருதப்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் கோயிலுக்கு சண்டிகேஸ்வரர் சென்று, அங்கிருந்து மண் எடுத்து வரும் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 5 மணியளவில் சந்திரசேகரர், சண்டிகேஸ்வரர், அம்பாள், விநாயகர், முருகன் ஆகியோர் தேரோடும் வீதிகளில் உலா வந்தனர். பின்னர், தியாகராஜர் சன்னதி முன்புறம் உள்ள கொடிமரத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது.

கொடியேற்றப்பட்டதை அடுத்து, உள்துறை மணியம் தியாகராஜரிடமும், ஓதுவார் ஆதிசண்டிகேஸ்வரரிடமும், லக்னப் பத்திரிகையை வாசித்தனர். அதன்படி, திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் மார்ச் 25 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றத்தைக் காண திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் கோ. கவிதா தலைமையிலான அலுவலர்கள் செய்திருந்தனர்.
 

Tags : Thiruvarur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT