தமிழ்நாடு

திருப்பூர் ஏடிஎம் இயந்திர திருட்டு: 6 பேர் கைது

2nd Mar 2021 08:14 PM

ADVERTISEMENT


திருப்பூர்: திருப்பூர் அருகே முகமூடி அணிந்து ஏடிஎம் இயந்திரத்தைத் திருடிச் சென்ற வழக்கில் வடமாநில இளைஞர்கள் 6 பேரை தனிப்படையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 

இவர்களிடமிருந்து ரூ.67 ஆயிரம் மற்றும் 2 நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் கூலிப்பாளையம் நான்கு சாலையில் பாங்க் ஆஃப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வளாகத்தில் ஏடிஎம் மையமும் உள்ளது.

இந்த வழியாக ஞாயிற்றுக்கிழமை சென்றவர்கள் வங்கி ஏடிஎம் மையத்தின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துள்ளனர். இதுதொடர்பாக ஊத்துக்குளி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ஊத்துக்குளி காவல்துறையினர் ஏடிஎம் மையத்தில் விசாரணை நடத்தினர். அப்போது ஏடிஎம் மையத்தின் கதவை உடைத்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிடிடிவி கேமிராப் பதிவை ஆய்வு செய்துள்ளனர்.

6 தனிப்படைகள் அமைப்பு: இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மேற்பார்வையில் காங்கயம் துணை காவல் கண்காணிப்பாளர் தனராசு தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. 

இந்தத் தனிப்படையினர் நடத்திய விசாரணையில், டாடா சுமோ வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த 6 பேர் ஏடிஎம் இயந்திரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. 

இந்த திருட்டுக்கு பயன்படுத்திய டாடா சுமோ வாகனத்தை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், விஜயமங்கலத்தில் உள்ள சுங்கச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஈச்சர் கண்டெய்னர் ஒன்று சேலம் நோக்கிச் சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து, அந்த வாகனத்தின் எண்ணை வைத்து ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 15 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், ஹரியானா மாநிலம் மேவத் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் (24), ரபிக் (24), ஷாகித் (25), ஷாஜித் (21), இர்சாத் (38), காசிம்கான் (45) ஆகிய 6 பேரையும் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள தனியார் குடோனில் வைத்து தனிப்படையினர் கைது செய்தனர். 

இந்த 6 பேரும் பெங்களூரில் இருந்து கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி கண்டெய்னரில் விஜயமங்கலம் வந்துள்ளனர். இதன் பிறகு கண்டெய்னரை அங்கு நிறுத்தி விட்டு ஏடிஎம் இயந்திரத்தைத் திருடுவதற்காகச் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டாடா சுமோவைத் திருடிக் கொண்டு திருப்பூர் வந்துள்ளனர். 

அப்போது கூலிப்பாளையம் நான்கு சாலையில் உள்ள வங்கியில் காவலாளி இல்லாதது தெரியவந்தது. 

இதையடுத்து 6 பேரும் சேர்ந்து ஏடிஎம் இயந்திரத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது. 

மேலும், ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்த ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.67,100 ஐ காவல் துறையினர் மீட்டதுடன், 2 நாட்டு துப்பாக்கிகள், 9 தோட்டா மற்றும் வெல்டிங் இயந்திரம் உள்ளிட்டவற்றையும் தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.

Tags : Tiruppur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT