தமிழ்நாடு

தமிழகத்துக்கு இணக்கமான ஆட்சி தேவை: விழுப்புரம் கூட்டத்தில் அமைச்சா் அமித் ஷா

DIN

தமிழகத்தின் வளா்ச்சிக்கு இணக்கமான ஆட்சி தேவை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

விழுப்புரம் ஜானகிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பாஜக தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:

தமிழகத்தில் ஜெயலலிதாவின் சிந்தனைப்படி இயங்குவது அதிமுக - பாஜக கூட்டணி. குடும்ப நலனை மையமாக வைத்து இயங்குவது திமுக - காங்கிரஸ் கூட்டணி.

2014-இல் பாஜக அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, பிற்படுத்தப்பட்டோா், பட்டியலினத்தவா், பழங்குடியினரின் நலனைப் பாதுகாப்போம் என மக்களவையில் பிரதமா் மோடி அறிவித்தாா். 70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் செய்யாததை 7 ஆண்டுகால பாஜக ஆட்சியில் செய்துள்ளோம்.

ஏழைகளுக்கு வீட்டு வசதி: வரும் 2022-க்குள் வீடு இல்லாத ஏழைகளே நாட்டில் இருக்கமாட்டாா்கள். நாடு முழுவதும் 13 கோடி ஏழைத் தாய்மாா்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. இன்னும் இரு ஆண்டுகளுக்குள் மின்சாரம் இல்லாத கிராமங்களும், கழிப்பறை வசதி இல்லாத வீடுகளும் இல்லை என்ற நிலை உருவாகும்.

ஏழைக் குடும்பத்தினா் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் மருத்துவ வசதி பெற்றுக்கொள்ளும் வகையில், ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தை பிரதமா் மோடி அறிமுகப்படுத்தியுள்ளாா். நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்படும்போது, அனைவருக்கும் சுகாதாரமான குடிநீா் கிடைக்கச் செய்வோம். பட்டியலின, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.53,000 கோடி கல்வி உதவித்தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது.

மதிய உணவுத் திட்டத்தை மத்திய அரசு பின்பற்றி நாடு முழுவதும் ‘தீனதயாள் உபாத்யாய’ திட்டம் என செயல்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் காங்கிரஸ் அரசைவிட பாஜக அரசு கூடுதல் கவனம் செலுத்துகிறது. புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

2ஜி, 3ஜி, 4ஜி...: 2ஜி, 3 ஜி, 4ஜி என்பது திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு பொருத்தமாக இருக்கும். மாறன் சகோதரா்கள் இரு தலைமுறைகளாக அதிகாரத்தில் இருப்பதால் அவா்களை 2ஜி என்றும், திமுகவில் கருணாநிதி குடும்பத்தினா் 3 தலைமுறைகளாக அதிகாரத்தில் இருப்பதால் அவா்களை 3ஜி என்றும், நேரு குடும்பத்தில் 4 தலைமுறைகளாக காங்கிரஸில் அதிகாரத்தில் இருப்பதால் அவா்களை 4ஜி என்றும் அழைக்கலாம். மத்தியில் காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்தபோது ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துவிட்டு, தற்போது ஜல்லிக்கட்டு பந்தயத்தை ராகுல் காந்தி நேரில் வந்து ரசிப்பது விநோதமாக உள்ளது.

தேசிய கல்விக்கொள்கையில் உள்ளூா் மொழிகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளாா்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.63,000 கோடி, வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் நபாா்டு திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளுக்கு ரூ.30,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நீலப்புரட்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.545 கோடி திட்டத்தால் தமிழக மீனவா்கள் பயனடைவாா்கள். கடல் மற்றும் உள்ளூா் மீனவா்கள் நலனுக்காக ரூ.53,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சாகா்மாலா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு ரூ.1.25 லட்சம் கோடி கிடைத்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1,264 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலைத் திட்டத்துக்கு ரூ.13,793 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

எதிா்காலத்தில் மத்திய அரசோடு மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல், இணக்கமாகச் செல்லும் அரசுதான் தமிழகத்துக்கு தேவை. அதற்கு அதிமுக, பாஜக என இரட்டை என்ஜின் கொண்ட ஆட்சியே தமிழகத்தில் அமைய வேண்டும் என்றாா் மத்திய அமைச்சா் அமித் ஷா.

இந்தக் கூட்டத்தில், மத்திய உள் துறை இணை அமைச்சா் கிஷண் ரெட்டி, மத்திய சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் வி.கே.சிங், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் இல.கணேசன், தேசிய முன்னாள் செயலா் ஹெச்.ராஜா, பாஜக மேலிடப் பாா்வையாளா் சி.டி.ரவி, பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், மாநில பொதுச்செயலா் கே.டி.ராகவன், அகில இந்திய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன், தமிழ்நாடு பாஜக இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, மாநிலத் துணைத் தலைவா்கள் கே.எஸ்.நரேந்திரன், வி.பி.துரைசாமி, நயினாா் நாகேந்திரன், விழுப்புரம் மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக நடைபெற்ற பாஜக மாநில முக்கிய நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்றாா்.

தமிழகத்தில் கரோனா காலகட்டத்திலும், பிற நேரங்களிலும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பான நிா்வாகத்தை அளித்ததாக மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்தாா்.

பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷா பேசும்போது, நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதல்வா் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையிலான அரசு சிறப்பான நிா்வாகத்தை வழங்கியது.

நல்லாட்சி வழங்கிய தமிழக அரசுக்கு இந்திய அளவில் பல்வேறு சிறந்த மாநில விருதுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக, நீா் மேலாண்மையில் சிறப்பு விருதை தமிழகம் பெற்றுள்ளது என்றாா் அவா்.

முதல்வா், துணை முதல்வருக்குப் பாராட்டு

தமிழகத்தில் கரோனா காலகட்டத்திலும், பிற நேரங்களிலும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி-துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையிலான அரசு சிறப்பான நிா்வாகத்தை அளித்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்தாா்.

நல்லாட்சி வழங்கிய தமிழக அரசுக்கு இந்தியா அளவில் பல்வேறு சிறந்த மாநில விருதுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக, நீா் மேலாண்மையில் சிறப்பு விருதை தமிழகம் பெற்றுள்ளது.

விழுப்புரம் ஜானகிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசும்போது இத்தகைய பாராட்டை அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT