தமிழ்நாடு

காவல்துறை அத்துமீறல் தொடர்வதை அரசு உறுதியாக தடுக்க வேண்டும்: இரா.முத்தரசன்

24th Jun 2021 04:04 PM

ADVERTISEMENT

காவல்துறை அத்துமீறல் தொடர்வதை அரசு உறுதியாக தடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அருகில் உள்ள பாப்பநாய்க்கன்பட்டி சோதனைச் சாவடியில் காவல்துறை இளம் ஆய்வாளர் நடத்திய தாக்குதலில் வணிகர் முருகேசன் மரணமடைந்துள்ளார். இந்த அதிர்ச்சியளிக்கும் துயரச் செய்தி அறிந்த முதலமைச்சர் உயிரிழந்த முருகேசன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கவும், குற்றம் புரிந்த காவல் இளம் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து, அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்படவும் உத்தரவிட்டது ஆறுதல் அளிக்கிறது.
பல ஆண்டுகளாக காவல்துறையில் தொடர்ந்துவரும் அத்துமீறல் கடந்த ஆண்டு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும், மகனும் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவமாக வெளிப்பட்டது. மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் அந்த துயர சம்பவத்தின் நினைவு நாளில் வணிகர் முருகேசன் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது காவல்துறையின் சிந்தனையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. மனித உரிமைகளையும், ஜனநாயக நடைமுறைகளையும் மதித்து, மக்களின் நண்பனாக சேவை புரியும் முறையில் காவல்துறையின் பணிமுறையை மாற்றியமைப்பது உடனடி அவசியமாகும். 
தேசிய காவல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு காவல் ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகளும், உயர்நீதிமன்றங்களும் மற்றும் உச்சநீதிமன்றமும் தீர்ப்புகளில் கூறியுள்ள வழிகாட்டும் நடைமுறைகள் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் வேண்டுகோள்கள் என அனைத்தும் அலட்சியப்படுத்தும் போக்கு இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாட்டில் பொருத்தமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT