தமிழ்நாடு

கடலோர மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

22nd Jun 2021 12:54 PM

ADVERTISEMENT


சென்னை: மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்கு மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்ட முன்வடிவு குறித்து கடலோர மாநிலங்களைச் சார்ந்த முதலமைச்சர்களுக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்ட முன்வடிவு குறித்து குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 9 மாநில முதல்வர்களுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதத்தில், 

சிறு துறைமுகங்களை ஒழுங்குபடுத்துவதாகக் கூறி மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் துறைமுக சட்ட வரைவு மசோதா குறித்து உங்களது கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இந்திய துறைமுகங்கள் 2021 என்ற புதிய சட்ட மசோதாவை இயற்றியிருப்பது குறித்து அனைவரும் நன்கறிவர். இது குறித்து ஜூன் 24-ஆம் தேதி மாநில அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

தற்போது நடைமுறையிலிருக்கும் 1908 துறைமுக சட்டத்தின்படி சிறு துறைமுகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். சிறு துறைமுகங்களை மேம்படுத்தவது, வழிமுறைப்படுத்துவது, கட்டுப்படுத்துவது போன்ற அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்டது.

ADVERTISEMENT

ஆனால், மத்திய அரசின் புதிய துறைமுக சட்ட வரைவு மசோதா, மாநில அரசின் பல அதிகாரங்களை பறிக்கும் வகையில் உள்ளது. இதுவரை ஆலோசனை தெரிவிக்கும் அமைப்பாக இருந்தவந்த மாநில கடல் மேம்பாட்டு ஆணையத்துக்கு அதிகாரங்களை அளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

எனவே, துறைமுக சட்ட வரைவு மசோதா மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் உள்ளதால், மாநில அரசின் கீழ் இருக்கும் சிறு துறைமுகங்களின் மேம்பாட்டில் பின்னடைவு ஏற்படும். ஒரு வேளை இந்த சட்ட வரைவு மசோதா நிறைவேற்றப்பட்டால், அதன் பிறகு சிறு துறைமுகங்கள் மீது மாநில அரசுக்கு எந்தவிதமான அதிகாரமும் இருக்காது.  ஏற்கனவே இந்த சட்ட வரைவு மசோதாவுக்கு மாநில அரசின் தரப்பில் கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளோம்.

எனவே, அனைத்து கடலோர மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இந்திய துறைமுகங்கள் 2021 சட்ட வரைவு மசோதாவுக்கு ஆட்சேபனைகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிழகம் உள்பட கடலோர மாநிலங்கள் அனைத்தும் கூட்டாக சேர்ந்து எடுக்கும் நடவடிக்கையே, இந்த சட்ட வரைவு மசோதாவை அடுத்தக் கட்ட நகர்வுக்குக் கொண்டுச் செல்லாமல் தடுக்கும். எனவே அனைத்து மாநிலங்களும் இது தொடர்பாக ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், வரும் 24ஆம் தேதி நடைபெறும் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில், இந்த சட்ட வரைவு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags : stalin MK stalin states TN CM
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT