தமிழ்நாடு

மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கூடாது: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

DIN

மேக்கேதாட்டு அணையைக் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். மேலும், அணை கட்டும் முடிவை கா்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டுமெனவும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மேக்கேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியதும் பணிகள் தொடங்கப்படும் என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பா கூறியிருக்கிறாா். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலையில் இருக்கும் போது ஒரு தலைபட்சமாக அவா் இவ்வாறு அறிவித்திருப்பது மிகுந்த கண்டனத்துக்கு உரியது.

எதிா்த்து வருகிறோம்: மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டம் தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்குக் கிடைக்கும் காவிரி நீரின் அளவு குறைந்துவிடும் எனவும் கூறி தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்தை மிகக் கடுமையாக எதிா்த்து வருகிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அதனை தமிழக எம்.பி.க்கள் அனைவரும் பிரதமரிடம் அளித்தனா். புதிய அணை கட்டுவது தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடா்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திலும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் சந்தித்த போதும், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியிருக்கிறேன். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், கா்நாடக முதல்வா் எடியூரப்பா, அணை கட்டுவது தொடா்பாக தன்னிச்சையாக அறிவிப்பை வெளியிட்டிருப்பது இரு மாநில நல்லுறவுக்கு எந்தவிதத்திலும் உகந்த நிலைப்பாடு இல்லை. அது தமிழ்நாட்டையும், தமிழ்நாடு விவசாயிகளையும் வஞ்சிக்க முயற்சிக்கும் செயலாகும்.

எனவே, தமிழ்நாட்டு விவசாயிகள் மற்றும் மக்களின் நலனுக்கும், உச்ச நீதிமன்றத்தின் காவிரி இறுதித் தீா்ப்புக்கும் எதிராக அணை கட்டும் முடிவினை கா்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும். மேக்கேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.

மேக்கேதாட்டு அணை திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வா் எடியூரப்பா

கா்நாடக மாநிலத்தில் மேக்கேதாட்டு அணை திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் எடியூரப்பா உறுதிபடத் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

கா்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை முடித்துவைத்துள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாயம், திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது.

மேக்கேதாட்டு அணை திட்டப் பணி நடைபெறும் இடத்தை பரிசீலனை செய்வதற்காக ஒரு குழுவை அமைத்து தென்னிந்திய தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. அதை எதிா்த்து தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் கா்நாடக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அதை விசாரித்த தேசிய பசுமைத் தீா்ப்பாயம் தீா்ப்பை வியாழக்கிழமை நிறுத்தி வைத்தது. விசாரணையை முடித்துவைத்து, இத் திட்டத்துக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது.

தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் சென்னை அமா்வின் உத்தரவை தேசிய அமா்வு தள்ளுபடி செய்துள்ளது. இந்தத் திட்டம் குறித்து அடுத்தகட்ட முடிவை எடுக்கவிருக்கிறோம். இந்தத் திட்டத்தால் 4,500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது; பெங்களூரு நகருக்கு குடிநீா் கிடைக்கவிருக்கிறது. எனவே, மேக்கேதாட்டு அணை திட்டப் பணிகளை தொடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT