தமிழ்நாடு

100 நாள் வேலை திட்டம்: 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பணி தரக்கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும்

18th Jun 2021 07:20 PM

ADVERTISEMENT

100 நாள் வேலை திட்டத்தில் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பணி தரக்கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கரோனா நோய்த் தொற்று மற்றும் ஊரடங்கு  காலத்தில் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் வேலைவாய்ப்பு இன்றி கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நூறு நாள் வேலை  திட்டத்தில் 55 வயது மேற்பட்டவர்களுக்கு வேலை தரக்கூடாது என்று தமிழக அரசின் உத்தரவு இத்திட்டத்தில் பணிபுரியக்கூடிய 55 வயதுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய கிராமப்புறத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் உருவாக்கியுள்ளது.
நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்கள் இந்த கொரானா காலத்தில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு பணிபுரிய வேண்டும் என்று தமிழக அரசு கருதினால் அது ஏற்புடையதே. ஆனால் நல்ல உடல் பலம் உள்ளவர்களைக் கூட 55 வயதை கடந்து இருந்தால் அவர்களுக்கு பணி தரக்கூடாது என்ற உத்தரவு ஏழை, எளிய மக்களுக்கு பெரும் சிரமத்தை தான் ஏற்படுத்தும். எனவே, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேலை தரக் கூடாது என்ற அரசின் உத்தரவை உடனடியாக திரும்ப பெற்று அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும். ஆண்டுக்கு 50 நாட்களுக்கு மட்டுமே தற்போது வேலை வழங்கப்படுகிறது. இதனை 200 நாட்களுக்கு வேலை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். பேரூர், நகர்ப்புற ஏழை, எளிய மக்களுக்கு பயன்தரக் கூடிய வகையில் இத்திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 
 

Tags : Marxist Communist Party
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT