தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடச் செய்ய வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

DIN

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு துணைப்போகக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என முந்தைய அதிமுக அரசு அறிவித்ததை உண்மையிலேயே செயல்படுத்திட, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தில் விடுபட்டுப்போன திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்க்க திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தையே நீர்த்துபோகச் செய்யும் பாதகமான சட்ட உட்பிரிவுகளை நீக்க வேண்டும். வேளாண் நிலங்கள், நீர் நிலைகள், நிலத்தடிநீர் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள அல்லது கைவிடப்பட்ட எந்தவொரு திட்டத்தையும் தொடர்ந்து செயல்பட மாநில சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. வளர்ச்சி என்ற பெயரில் கெயில், சாகர் மாலா, பெட்ரோலிய முதலீட்டு மண்டலம், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ என்று புதிய புதிய திட்டங்களை வெவ்வேறு பெயர்களில் கொண்டுவந்து விவசாய நிலங்களை அழிக்க நினைக்கும் மத்திய அரசின் பேரழிவுத் திட்டங்களை தமிழக அரசு எவ்வகையிலும் அனுமதிக்கக்கூடாது. 

மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்குப் பதிலாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியே போதும் என்ற மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமையைப் பாதிக்கக் கூடிய ஒன்றிய அரசின் ஒற்றையாட்சிக் கொள்கை முடிவுகளுக்கு எதிராகவும், மண்ணின் வளத்தைப் பாதிக்ககூடிய திட்டங்களைச் செயல்படுத்த மக்களிடம் கருத்துக்கேட்க தேவையில்லை என்ற மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் மத்திய அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளை எதிர்த்து வெறுமனே கடிதம் மட்டும் எழுதாமல், பாராளுமன்றத்தில் தங்களுக்குள்ள எண்ணிக்கைப் பலத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி ஆளும் திமுக அரசு உறுதியான அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு அவற்றைத் திரும்பப்பெறச் செய்யவேண்டும். இவற்றைச் செய்துமுடித்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான அறிவிப்பின் நோக்கத்தை முழுமைப்படுத்தி தமிழக விவசாயிகளையும், விவசாயத்தையும் காத்திட முன்வரவேண்டும்.

மேலும், அரியலூர், புதுக்கோட்டை மட்டுமின்றி தமிழகத்தின் எந்தவொரு பகுதியிலும் மக்களையும், மண்ணையும் பாதிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் துணைப்போகக் கூடாதென்றும், இது குறித்தான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாட்டை ஒன்றிய அரசுக்குத் தெளிவாக விளக்கிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT