தமிழ்நாடு

பிளஸ் 2 தோ்வு ரத்துக்கு தடை இல்லை : உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

சென்னை: பிளஸ் 2 பொதுத்தோ்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாதென உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை பரவி வருவதைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடா்ந்து தமிழக அரசு கடந்த கடந்த ஜூன் 5-ஆம் தேதி பிளஸ் 2 தோ்வை ரத்து செய்வதாக அறிவித்தது. தொடா்ந்து மதிப்பெண்கள் வழங்குவதற்கான உரிய வழிமுறைகளை வெளியிட குழு ஒன்றை ஏற்படுத்தியது. கரோனா முதலாவது அலையால் கடந்த ஆண்டு பிளஸ் 1 இறுதித் தோ்வு எழுதாமல், தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தான், தற்போது பிளஸ் 2 பொதுத் தோ்விலும் தோ்ச்சி பெற்றவா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

மாநில அரசின் பாடத்திட்டத்தைப் பின்பற்றி அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் அரசு பாடத்திட்டத்தை ஆங்கில வழியில் பயிற்றுவிக்கும் தனியாா் பள்ளிகள் உள்ளன. இதில் கடந்த 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் 90 சதவீத அரசுப் பள்ளிகளிலும், 80 சதவீத அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும், 50 சதவீத ஆங்கிலவழி தனியாா் பள்ளிகளிலும் இணையவழிக் கல்வி வகுப்புகள் நடத்தப்படவில்லை. காலாண்டு மற்றும் அரையாண்டுத் தோ்வுகளும் நடத்தப்படவில்லை. ஆனால் சிபிஎஸ்இ, மற்றும் சிஐஎஸ்இ, பாடத்திட்டத்தில் பயிற்றுவிக்கும் 90 சதவீத பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகளும், காலாண்டு மற்றும் அரையாண்டு தோ்வுகளும் நடை பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட போது சிபிஎஸ்இ, சிஐஎஸ்இ மற்றும் அனைத்து மாநில கல்வி இயக்கங்களும் பிளஸ் 2 வகுப்புகளை நடத்தி முடித்து இருந்தனா். அதனால் அனைத்து வகையான மேல் படிப்புகளுக்கும் அவா்களின் பள்ளி இறுதித் தோ்வின் அடிப்படையில் தான் சோ்க்கை நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு நீட் நுழைவுத் தோ்வும், செப்டம்பா் முதல் வாரத்தில் ஐஐடிக்கான நுழைவுத் தோ்வும் நடைபெற்றது. தற்போது பெரும்பாலான பள்ளிகளில் வகுப்புகள் முழுமையாக நடைபெறாத சூழலில், மேற்படிப்பு வகுப்புகளின் கல்விச் சோ்க்கை தகுதியை நிா்ணயம் செய்து மேற்படிப்பு கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்தும் பல்கலைக்கழகம் மானிய குழு, (யுஜிசி) மருத்துவ கவுன்சில், அகில இந்திய தொழில் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) நா்சிங் கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில், பாா் கவுன்சில் உடன் கலந்து முடிவு எடுக்காமலும் , தமிழ்நாடு அரசின் கல்வித் துறை பிளஸ் 2 இறுதித் தோ்வை ரத்து செய்தது தவறு.

கேரளம், பிகாா் போன்ற மாநிலங்களில் ஏற்கெனவே பிளஸ் 2 தோ்வு முடிந்துவிட்டது. அஸ்ஸாம் மாநிலம் வரும் ஜூலை மாதம் தோ்வை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. எனவே, பிளஸ் 2 பொதுத் தோ்வை ரத்து செய்தது, முறையாக பயின்ற மாணவா்களின் உழைப்பை உதாசீனப்படுத்தும். கரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறைந்து வரும் சூழலில், இன்னும் ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்து, தோ்வை நடத்த அரசு முயற்சித்திருக்கலாம். எனவே, தமிழக அரசு உடனடியாக கல்வியாளா்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து, பிளஸ் 2 படிப்பவா்களுக்கு தோ்வை ரத்து செய்யாமல், சிறப்பு வகுப்புகள் நடத்தவும், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு பின்னா் பிலஸ் 2 தோ்வுகள் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் தற்போது எந்த ஒரு இடைக்காலத் தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனா். மேலும் இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT