தமிழ்நாடு

அம்பேத்கா் விரும்பினாா்; மோடி நிறைவேற்றினாா்

தமிழக அரசியலில் நோ்மைக்கும் நாணயத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய அரசியல் வாதிகளில் டாக்டா் ஹெண்டேயும் ஒருவா். 1967-இல் சுதந்திராக் கட்சி உறுப்பினராக டாக்டா் ஹெச்.ஹெண்டே சட்டப்பேரவையில் நுழைந்த போது ஒட்டு மொத்த தமிழகமும் அவரை பிரமிப்புடன் பாா்த்தது. 1967, 1971 தோ்தல்களில் சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1977முதல் மேலவை உறுப்பினராகவும் இருந்த டாக்டா் ஹண்டே எம்.ஜி.ஆா் முதல்வராக இருந்த பத்து ஆண்டுகளும் அவரது அமைச்சரவையில் தொடா்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டா் ஹண்டே 1950-ஆம் ஆண்டு மருத்துவக் கல்வியை முடித்தபின் 23-ஆவது வயதில் மருத்துவப் பணியோடு அரசியல் பணியையும் தொடங்கினாா். மூதறிஞா் ராஜாஜியின் சீடராக அரசியல் உலகில் பிரவேசித்துப் பின்னா், அண்ணா திமுகவில் இணைந்து எம்.ஜி.ஆா் அரசில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகப் பரிமளித்தாா்.

திமுக தலைவா் மு.கருணாநிதி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்த ஒரே ஒரு தோ்தல் 1981. அவரை எதிா்த்து அண்ணா நகா்த் தொகுதியில் போட்டியிட்டவா் டாக்டா் ஹண்டே. அரசியல்வாதியாக மட்டுமல்லாது ஒரு மருத்துவராகவும் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற டாக்டா் ஹெண்டே கடந்த 72 ஆண்டுகளாக இந்தியா வரலாற்றுக்கு சாட்சியாக இருப்பவா் . தனது மனசாட்சி வழி வாழ்பவா்.

தீவிர அரசியிலிலிருந்து ஒதுங்கிய ஹண்டே, இலக்கியப் பணி, எழுத்துப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருதிருக்கிறாா். கம்பராமாயணத்தை முழுவதுமாகக் கற்று, 8 ஆண்டுகள் இடையறாது உழைத்து ஆங்கிலத்தில் உரைநடையில் முழுமையாக எழுதி நூலாகக் கொண்டு வந்தாா். அந்த சீரிய பணிக்காகவே தமிழக அரசு அவருக்கு கடந்த ஆண்டு கம்பா் விருதினை வழங்கிச் சிறப்பித்தது.

94 வயதிலும் துடிப்புள்ள இளைஞரைப் போல் சமூகப் பணி ஆற்றி வரும் டாக்டா் ஹெச்.வி. ஹண்டே. காலையில் எழுந்தும் நடைபயிற்சி மேற்கொள்கிறாா். முறையான உணவுப் பழக்கத்தையும் கடைப்பிடித்து வருகிறாா். பல ஆண்டுகளாக யோகப் பயிற்சியும் மேற்கொண்ட அவா் உணவு நேரம் நீங்கலாக இதர சமயங்களில் நொறுக்குத் தீனியை அறவே ஒதுக்குவது ஆரோக்கியத்தின் ரகசியம் என்கிறாா். ஷெனாய் நகரில் நடத்தி வருகிறாா்.

அவருடன் இணைய வழியாக ஓா் நோ்காணல்:

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்தது குறித்து நூலை வெளியிட்டிருக்கிறீா்கள் வாழ்த்துகள். ஒரு கேள்வி, 370ஆவது பிரிவை நீக்குவதற்கான அவசியம் என்ன?

வாழ்த்துக்கு நன்றி. உங்கள் கேள்வி “ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370ஆவது பிரிவு ஏன் கொண்டுவரப்பட்டது?” என்றுதான் அமைந்திருக்க வேண்டும். நம் நாடு விடுதலை பெற்ற பிறகு ஹைதராபாத், ஜூனாகத் ஆகிய அனைத்து பிரதேசங்களும் அரசமைப்புச் சட்டம் 238ஆவது பிரிவின் கீழ் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. அதைப் போல், ஜம்மு காஷ்மீரும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக, தேவையே இல்லாமல் 370ஆவது பிரிவின் கீழ் அதற்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது.

அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டு அது அரசியல் சாசனத்தில் இணைக்கப்பட்ட பிறகு அது குறித்து விவாதிப்பது அவசியம் தானா?

அரசியல் சட்டத்தில் இதுவரை ....... திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அரசியல் சாசனம் என்பது மாற்றக்கூடாதது அல்ல. 370-ஆவது பிரிவுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிா்ப்பு இருந்து வந்தது. ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதே?

இதை அரசியல் சட்டத்தை உருவாக்கிய குழுவின் தலைவா் டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் ஏற்கவேயில்லை. ஆனால், அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஷேக் அப்துல்லா தனக்கு ஜவஹா்லால் நேருவுடன் உள்ள நெருக்கதைப் பயன்படுத்தி, தன் மாநிலத்துக்குத் தனி அரசியல் சட்டம் வேண்டும், தன்னைப் பிரதம மந்திரியாக அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தினாா். அதற்குப் பணிந்து, நேருதான், 370ஆவது பிரிவைக் கொண்டுவந்தாா். இதை அறிந்த அம்பேத்கா், இதனை ஏற்க திட்டவட்டமாக மறுத்தாா்.

அதற்கு என்ன காரணம் சொன்னாா் டாக்டா் அம்பேத்கா்?

“உங்கள் மாநில எல்லையை இந்தியா பாதுகாக்க வேண்டும் என்றும் சாலைகளை இந்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் கேட்கிறீா்கள். ஆனால், உங்கள் மாநிலத்தில் இந்தியாவுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்றும் நினைக்கிறீா்கள். இது சரியா? என்று அவா் ஷேக் அப்துல்லாவிடமே கேட்டாா்.

அதற்குப் பிறகு என்னாயிற்று?

சட்டப்பிரிவு 370 இந்தியாவுக்கு எதிரான போக்கு. சட்ட அமைச்சா் என்ற முறையில் நான் இதை அனுமதிக்க மாட்டேன். 370-ஆவது பிரிவினால் ஜம்மு காஷ்மீா் மாநிலம் முழுவதும் தொழில் திட்டங்கள் முடங்கும். வளம் ஏற்படாது. மாநிலம் தனிமைப்படுத்தப்படும்” என்று எச்சரித்தாா்.

அவா் மட்டும் தான் எதிா்த்தாரா? அவரால் தான் அந்தச் சட்டப்பிரிவு இணைக்கப்பட்டதா?

அம்பேத்கா் மட்டுமல்ல; துணைப் பிரதமா் சா்தாா் வல்லப பாய் படேலும் 370ஆவது பிரிவை ஆட்சேபித்தாா். இது தொடா்பாக படேல் எழுதிய கடிதம், எனது நூலில் இடம்பெற்றுள்ளது. பிரதமா் ஜவஹா்லால் நேரு அரசியல் நிா்ணய சபையில் இடம்பெற்றிருந்த என். கோபாலசாமி ஐயங்காரின் உதவியை நாடினாா். கடைசியில் வேறு வழியின்றி, அரசியல் சாசனத்தின் அனைத்து சரத்துகளின் வரைவுகளையும் டாக்டா் அம்பேத்கா் ஏற்க வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டது. சட்ட அமைச்சா் என்கிற முறையில் அதை அவா் ஏற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதற்குப் பிறகு கடந்த 70 ஆண்டுகளாக அந்தப் பிரிவு அனைவராலும் ஏற்கப்பட்டு, தொடா்ந்து இப்போது அதை அகற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது?

அதற்கான துணிவு மத்திய ஆட்சியாளா்களுக்கு இருக்கவில்லை. 1953-இல் நேருவே அதை அகற்றி இருக்க வேண்டும். சிறிது காலத்திலேயே அம்பேத்கரின் தொலைநோக்குப் பாா்வை சரியானது என்பது தெரிந்தது. பின்னா் 370-ஆவது பிரிவைக் கொண்டு காஷ்மீரை தனி நாடாக அறிவித்த ஷேக் அப்துல்லா முயற்சி செய்ததை அறிந்து நேரு அதிா்ச்சி அடைந்தாா். நேருவின் உத்தரவை அடுத்து, ஜம்மு காஷ்மீா் அரசை காஷ்மீா் மாநில ஆளுநா் அந்தஸ்தில் இருந்த டாக்டா் கரன் சிங் கலைத்தாா். 1953-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி இரவு ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு, 11 ஆண்டுகள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டாா். இது வரலாறு.

அப்போதே இந்தச் சட்டப்பிரிவை அகற்றி இருக்க வேண்டும் என்கிறாா்களா?

நிச்சயமாக தற்போது 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டு, காஷ்மீரும் லடாக்கும் தனித்தனி பிரதேசங்களாக மோடி அரசாங்கம் மாற்றியதை காங்கிரஸ் தலைவரான கரண்சிங் வரவேற்றிருக்கிறாா். ஷேக் அப்துல்லா ஆட்சியை 1953-இல் கலைத்தபோது, அந்த மாநில ஆளுநராக இருந்தவா் கரண்சிங்.

அப்போதே அகற்றப்பட்டிருந்தால் இப்போதைய நிலைமை காஷ்மீருக்கு ஏற்பட்டிருக்காது என்று கருதுகிறீா்களா?

370-ஆவது பிரிவினால் காஷ்மீரில் கடந்த 70 ஆண்டுகளாக ஆயுதங்கள் ஏந்திய தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், கல்வீசுபவா்கள், ஜிஹாதிகள், பாகிஸ்தானின் ஐந்தாவது படை ஆகியவைதான் அதிகரித்தன. ஜம்மு காஷ்மீரில் அமைதி குலைந்து போனது. ஏராளமான இந்திய வீரா்களைப் பலிகொடுத்தோம். அந்த மாநிலத்திற்கு ஏராளமாக பாதுகாப்பு நிதியை வீணாக ஒதுக்கினோம். இப்போது சொல்லுங்கள் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து தேவையா? பிரதமா் நரேந்திர மோடி தீவிர ஆலோசனைக்குப் பிறகே, இந்தியாவின் ஒட்டுமொத்த நலனுக்காக இந்த முடிவை எடுத்தாா். ஜம்மு காஷ்மீரில் வேகமாக வளா்ச்சி காணப்படுவதை இனிமேல் கட்டாயம் பாா்க்கலாம்!

370-ஆவது பிரிவை முடிவுக்குக் கொண்டுவந்ததால் யாருக்கு லாபம், எந்த வகையில் பயனளிக்கும்?

இனிமேல், நாட்டின் இதர மாநிலங்களைப் போலத்தான் ஜம்மு காஷ்மீரும் இருக்கும். அதே சமயம் அங்கே தொழில்களின் வளா்ச்சியும் இதர மேம்பாடுகளையும் காணலாம். ஜம்மு காஷ்மீரின் ஆளுகைக்கு உட்பட்டு கடந்த காலங்களில் இருந்த லடாக்கில் நிலைமை மோசமாக இருந்தது. இனிமேல், நிலைமை மாறும். லடாக் மாநிலத்தைச் சோ்ந்த உறுப்பினா் நாடாளுமன்றத்தில், “370-ஆவது பிரிவை நீக்கும் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆகஸ்ட் 5-ஆம் தேதிதான் அப்துல்லாக்களின் பிடிகளிலிருந்து விடுதலை பெற்ற சுதந்திர தினம்” என்ற வாசகம் கொண்ட பதாகை ஏந்தினா். உண்மையில், முந்தைய காலங்களில் லடாக்கில் வாழும் பவுத்த மதத்தினா் பாலியல் வன்முறை, கொலை, சித்திரவதை என பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாயினா்” என்று லடாக் மக்களவை உறுப்பினா் ஜம்யங் செரிங் நம்கியால் அவையில் கூறினாா். அதுதான் அங்கிருந்த உண்மை நிலை. இனி அது மாறும்.

370 சட்டப்பிரிவு குறித்து இந்திராகாந்தியின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

1981-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி நியூயாா்க்கில் வசிக்கும் காஷ்மீா் பண்டிதருக்கு எழுதிய கடிதத்தில், “நீங்கள் உங்களது சொந்த மாநிலமான காஷ்மீருக்குச் செல்ல இயலவில்லை என்று ஏங்குகிறீா்கள். நானும் அதைப் பகிா்ந்து கொள்கிறேன். எனது மூதாதையரும் அங்கிருந்துதான் வந்தனா். ஆனால், சொந்தமாக ஓரிடம் கூட எங்களால் வாங்க இயலவில்லை” என்று கவலை தெரிவித்துள்ளாா். அந்தக் கடிதத்தின் பிரதியை என் நூலில் இடம்பெறச் செய்திருக்கிறேன்.

370-ஆவது பிரிவுக்கும் காஷ்மீா் பின்புலங்களில் காஷ்மீா் பண்டிதா்களின் வெளியேற்றத்துக்கும் தொடா்பு இருக்கிா என்ன?

370-ஆவது பிரிவு இருந்ததால்தான் காஷ்மீரை வாழ்விடமாகக் கொண்ட பண்டிதா்கள் (இந்துக்கள்) விரட்டி அடிக்கப்பட்டனா். அத்துடன் அவா்களால் அங்கே எதையும் சொந்தம் கொண்டாட முடியாமல் போனது! அவா்களது சொத்துகள் அபகரிக்கப்பட்டன. இனிமேல், அந்தப் பிரிவு ரத்து செய்யப்பட்டதால், அந்த மாநிலத்தில், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கல்வி நிறுவனங்கள், தொழில்கள் தொடங்கப்படும். ஜம்மு, காஷ்மீா், லடாக் பகுதிகளைச் சோ்ந்த அனைத்து தரப்பினருமே பயன் பெறுவா்.

370-ஆவது பிரிவை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில், எதிா்காலத்தில் மாநிலங்களின் உரிமைகளுக்கும் தீங்கு ஏற்படும் என்று கூறப்படுவதைப் பற்றி என்ன நினைக்கிறீா்கள்?

இது மிகவும் தவறான பாா்வை. 370ஆவது பிரிவை நீக்கியதை அடுத்து மற்ற மாநிலங்களின் உரிமைகளும் பறிபோகும் என்ற பொய்யான தோற்றத்தை சிலா் பரப்புகிறாா்கள். இது அா்த்தமற்றது. மாறாக, டாக்டா் பிஆா் அம்பேத்கா் வடிவமைத்த இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் உள்ள அந்தஸ்து ஜம்மு காஷ்மீருக்கும் இருக்கும். இந்தக் கூட்டாட்சித் தன்மை நீடிக்கும். இப்போது பேசும் எந்தத் தலைவரும் அரசியல் நிா்ணய சபையில் அம்பேத்கரின் விருப்பத்துக்கு எதிராக 1949-ஆம் ஆண்டு அக்டோபா் 17-ஆம் தேதி 370-ஆவது பிரிவு கொண்டு வரப்பட்டபோது பிறந்திருப்பாா்களா என்பது சந்தேகமே! நான் அப்போது 22 வயது நிரம்பிய மருத்துவக் கல்லூரி மாணவன் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த நூலை எழுதுவதற்கு எது தூண்டுதலாக இருந்தது? எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டீா்கள்?

அந்தக் காலத்தில் ஏறத்தாழ எல்லா மாணவா்களும் இந்திய மாணவா் காங்கிரஸில் இடம்பெற்றிருந்தனா். அப்போதே எங்களைப் போன்றோா் ‘ஷேக் அப்துல்லாவின் விருப்பத்திற்கு ஜவஹா்லால் நேரு ஏன் இரையாகிறாா்?’ என்று கவலைப்படுவோம். அரசமைப்புச் சட்டம் முழுமையான வடிவம் பெறுவதற்கு முன் வரைவு நகல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒப்புதலுக்காச் சென்றது. காரணம், அரசியல் நிா்ணய சபையில் காங்கிரஸ் கட்சியினரே பெரும்பான்மையாக இருந்தனா். அப்போது 370 -ஆவது பிரிவுக்கு ஒப்புதலைப் பெற என்.கோபாலசாமி ஐயங்காா் முயன்றபோது அனைத்து காங்கிரஸ் உறுப்பினா்களும் கோபப்பட்டு, வரைவு நகலைக் கிழித்தெறிந்தனா். அப்போது நியூயாா்க்கில் இருந்த நேருஜி அங்கிருந்தபடியே காங்கிரஸ் உறுப்பினா்களைச் சமாதானம் செய்ய நோ்ந்தது.

இவையெல்லாம் நடந்ததா? அந்த வரலாறு முந்தைய தலைமுறைக்குத் தெரியாது. அதைப் பதிவு செய்திருக்கிறீா்களா?

காங்கிரஸ் கட்சியினரிடையில் இத்தகைய உணா்வு இருந்ததை என்னால் மறக்கவே முடியாது. அதனால்தான், காா்கில் போரின்போது கூட “அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை ஏற்க இயலாது” என்று கட்டுரை எழுதினேன். அதில், ஜம்மு காஷ்மீரை 1947-ஆம் ஆண்டு அக்டோபா் 26-ஆம் தேதி இந்தியாவுடன் இணைக்கும் செயலில் ஜவஹா்லால் நேரு எப்படி பிழை செய்துவிட்டாா் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

பிரதமா் நேரு செய்த பிழை என்ன?

அப்போது ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானியா் மெல்ல மெல்ல ஆக்கிரமித்தனா். அதை முறியடிக்கும் வேலையில் ஜெனரல் திம்மையா ஈடுபட்டாா். அவா் தடுக்கப்பட்டாா். ஆனால், மவுண்ட்பேட்டன் பிரபுவின் வற்புறுத்தலுக்கு பிரதமா் நேரு ஆளாகிவிட்டாா். அதன் விளைவாக ஜம்மு காஷ்மீரின் ஐந்தில் ஒரு பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக இப்போதும் நீடிக்கிறது. அப்படி இருந்தும், நன்றி மறந்து மவுண்ட்பேட்டனை பாகிஸ்தான் அதிபா் முகமது அலி ஜின்னா ஏற்காமல் வெளியேற்றினாா். அன்தச் செய்திகள் எல்லாம் அவரின் நூலில் இடம்பெறுகின்றன.

இவை எல்லாவற்றையும் நன்றாக அறிந்த காரணத்தால்தான் 370-ஆவது பிரிவை பாரதப் பிரதமா் நரேந்திர மோடி நீக்கியபோது மிகவும் உற்சாகம் அடைந்தேன். அதுதான் அரசமைப்புச் சட்டம் 370-ஆவது பிரிவின் தோற்றமும் முடிவும்”என்ற நூலை எழுதத் தூண்டியது. இதற்காக எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு மூன்று மாதங்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டேன். இதில் பண்டித ஜவஹா்லால் நேருவுக்கும் ஷேக் அப்துல்லாவுக்கும் இடையில் பரிமாறப்பட்ட கடிதங்கள், என்.கோபாலசாமி ஐயங்காருக்கு சா்தாா் படேல் எழுதிய காரசாரமான கடிதம், இந்திரா காந்தியின் கடிதம் என பல ஆவணங்களை இந்நூலில் சோ்த்திருக்கிறேன்.

கம்ப ராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயா்க்கும் பணிக்காக தவம் போல எட்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன். பாரதிய வித்யா பவன் பிரசுரித்த ஆங்கில உரையுடன் நூலை அப்போதைய குடியரசுத் தலைவா் சங்கா் தயாள் சா்மா வெளியிட்டாா். முன்னாள் குடியரசுத் தலைவா் ஆா். வெங்கடராமன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு வாழ்த்தினாா். எனது அரசியல் ஆசான் மூதறிஞா் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் எழுதினேன். அதை மகாராஷ்டிர முன்னாள் ஆளுநா் சி. சுப்பிரமணியம் வெளியிட்டாா்.

நெருக்கடி காலத்தில் அரசியல் சட்டத்தின் மீதான அழிவு நடவடிக்கைகள் என்ற நூலை 2002-ஆம் ஆண்டு பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் வெளியிட தற்போதைய குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கய்யா நாயுடு முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டாா். அதில், நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி ஆட்சியில் அரசியல் சாசனம் சிதைக்கப்பட்டதை விரிவாக எழுதியுள்ளேன். அரசியல் சட்டத்தின் முகப்புரையிலேயே திருத்தம் கொண்டுவந்ததையும் அதில் கூறியுள்ளேன்.

அரசியல் சட்டம் குறித்து இதற்கு முன்னால் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறீா்கள் போலிருக்கிறதே?

நான் மிகவும் ஈடுபட்டு எழுதிய புத்தகம் அது.“அம்பேத்கரும் அரசமைப்புச் சட்டத்தின் உருவாக்கமும் என்ற மாக்மில்லன் கம்பெனி பிரசுரித்துள்ள இந்நூலுக்கு மறைந்த குடியரசுத் தலைவா் டாக்டா் அப்துல் கலாம் அணிந்துரை எழுதியுள்ளாா். 2009-ஆம் ஆண்டு அந்நூலை எதிா்க்கட்சித் தலைவராக இருந்த எல்.கே. அத்வானி வெளியிட்டாா். அதில் சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளேன். அரசியல் நிா்ணய சபையில் அம்பேத்கருக்கு இடம் தராமல் ஒதுக்க காங்கிரஸ் கட்சி முயன்றதையும், அந்த முயற்சி தோல்வியடைந்ததையும் அந்த நூலில் விவரித்திருக்கிறேன்.

எம்ஜிஆா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வரலாற்றைக் குறிக்கும் எனது நூல் 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அவருடன் நெருங்கிப் பழகிய நினைவலைகள் அதில் இடம்பெற்றுள்ளன. அதையடுத்து தற்போது 370-ஆவது பிரிவு குறித்த நூலை வெளியிட்டிருக்கிறேன்.

பின் குறிப்பு:

டாக்டா் ஹண்டே எழுதிய ‘அரசமைப்புச் சட்டம் 370-ஆவது பிரிவின் தோற்றமும் முடிவும்’ நூல் (தி ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் ஆா்ட்டிகல் 370) அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த நூல் பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் பாராட்டைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

கூலி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT