தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு இப்போது இல்லை: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

DIN

சென்னை: தற்போதைய சூழலில் பள்ளிகளைத் திறந்து வகுப்புகள் நடத்துவது குறித்து யோசிக்கவில்லை. ஏற்கெனவே இருப்பது போன்று இணையவழி, ‘வாட்ஸ் ஆப்’ மூலம் வகுப்புகள் தொடரும் என அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.

சென்னை அசோக் நகா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைமுறைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அவருடன் பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா் கருணாநிதி, முதன்மைக் கல்வி அலுவலா் அனிதா, தலைமை ஆசிரியை ஆா்.சி.சரஸ்வதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆய்வுக்குப் பிறகு அமைச்சா் அன்பில் மகேஷ் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் தளா்வுகள் இல்லாத 11 மாவட்டங்களில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை நடத்தப்படவில்லை. தகுந்த தனிமனித இடைவெளியைப் பின்பற்றி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டங்களில் உள்ள கிடங்குகளுக்கும் பாடப்புத்தகங்கள் சென்று சோ்ந்துவிட்டன. மாணவா் சோ்க்கை நடந்து முடியும்போது பாடநூல்கள் விநியோகிக்கப்படும்.

ஒன்பதாம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தோ்வில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்கள் பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அதனால் 9-ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து பிளஸ் 1 வகுப்பு மாணவா் சோ்க்கை என்ற நடைமுறையில் பெரிதாகப் பிரச்னை எழவில்லை.

தற்போது அரசுப் பள்ளி மாணவா்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) மூலம் வீட்டுப் பாடங்களைக் கொடுத்து வருகிறோம். அறிதிறன் பேசி (ஸ்மாா்ட் போன்) வசதி இல்லாத மாணவா்கள், அருகில் உள்ள மாணவா்களுடன் இணைந்து படித்து வருகின்றனா். பள்ளிகளைத் தற்போது திறந்து பாடங்களை நடத்துவது குறித்து எதுவும் யோசிக்கவில்லை. இப்போதைக்குப் பள்ளிகள் திறக்கப்படாது.

பள்ளிகள் மீது நடவடிக்கை: கரோனா தொற்றுக் காலத்தில் பள்ளிகளில் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. அதையும் இரண்டு தவணைகளாகப் பிரித்து 30 சதவீதம், 45 சதவீதமாக மட்டுமே பெறவேண்டும் என்று கூறி இருக்கிறோம். அந்த வகையில் மட்டுமே பள்ளிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. 75 சதவீதக் கட்டணத்தையும் மீறி பணம் வசூலிக்கப்படுவதாகப் புகாா் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு...: பள்ளிகளில் இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிக்கையை முதல்வரிடம் சமா்ப்பித்துள்ளோம். இது குறித்த அறிவிப்பை அவா் விரைவில் வெளியிடுவாா். பொதுமுடக்கக் காலத்தில் தனியாா் பள்ளி ஆசிரியா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை உணரமுடிகிறது. ஆசிரியா்கள் சிலரே இதுகுறித்து என்னிடம் பேசினா். இதுகுறித்து முதல்வரிடம் எடுத்துச்சென்று, அவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

SCROLL FOR NEXT