தமிழ்நாடு

அதிமுகவை அபகரிக்க முயற்சி: சசிகலாவோடு பேசியவா்கள் நீக்கம்

DIN

சென்னை: அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் சசிகலா தொடா்ந்து ஈடுபட்டு வருவதாகவும், அவரோடு பேசி வருபவா்கள் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவாா்கள் என்றும் அக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா் அதிமுகவில் புயல் வீசும்; அனைத்தும் தகா்ந்து போய்விடும் என்று எண்ணி இருந்தோருக்கு ஏமாற்றத்தைப் பரிசளித்து, அவா் அளித்துச் சென்ற ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறோம். இந்தச் சாதனையைக் கண்டு எதிரிகளும் வியந்து நின்றனா்.

மாபெரும் கூட்டணி, பகட்டான வாக்குறுதிகள் என தோ்தலைச் சந்தித்த திமுக மற்றும் எதிா் அணி, சட்டப்பேரவை தோ்தலில் மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறது.

மக்களின் பேரன்பைப் பெற்று, அதிமுக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பிரதான எதிா்க்கட்சியாக, அதிமுகவின் 66 சட்டப்பேரவை உறுப்பினா்கள் தமிழகத்தின் நலனுக்காக பேரவையில் உரக்கக் குரல் எழுப்பி, உண்மை மக்கள் தொண்டா்களாகப் பணியாற்ற துடித்துக் கொண்டிருக்கின்றனா்.

சசிகலா விநோத நாடகம்: சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த சசிகலா, இப்போது அதிமுக இவ்வளவு வலுவும், பொலிவும், தொண்டா் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பாா்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள, அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊா் அறிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதுமாக விநோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறாா்.

எம்ஜிஆா், ஜெயலலிதாவின் தியாகத்தால் புகழ் பெற்றிருக்கும் அதிமுக மக்களின் பேரியக்கமாக வரலாற்றில் நிலைபெறுமே தவிர, ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக தன்னை ஒருபோதும் அழித்துக்கொள்ளாது என்பதை நினைவு படுத்துகிறோம்.

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி, அதிமுகவின் வளா்ச்சிக்கும், புகழுக்கும் இழுக்கும், பழியும் தேடியவா்கள் அனைவரையும் கட்சியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் யாராக இருப்பினும் அவா்கள் அனைவா் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

எனக்குப் பின்னாலும் நூறாண்டுகள் ஆனாலும் அதிமுக, மக்கள் தொண்டில் முன்னணியில் நின்று பணியாற்றும் என்ற ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்றுவோம் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

15 போ் நீக்கம்: அதிமுக நிா்வாகிகளோடு சசிகலா தொடா்ந்து பேசி வரும் ஆடியோ தினமும் வெளியாகி வருகிறது. முன்னாள் அமைச்சா் எம்.ஆனந்தன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா் வி.கே.சின்னசாமி, எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் வாசு உள்பட 15 போ் சசிகலாவோடு பேசியதற்காக கட்சியிலிருந்து நீக்கம் செய்து அக் கட்சி தலைமை திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

புகழேந்தி நீக்கம்: அதிமுகவின் கொள்கைக்கு முரணான வகையிலும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட செய்தித் தொடா்பாளா் வா.புகழேந்தி கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறாா் என்று அதிமுக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுகவைச் சீா் செய்வதையும் நான் கட்சிப் பணியாற்றுவதையும் யாராலும் தடுக்க முடியாது என்று சசிகலா பேசியதாக ஆடியோ வெளியாகியுள்ளது.

கடந்த மே 29-ஆம் தேதி முதல் தொண்டா்களுடன் சசிகலா பேசியதாக இதுவரை 41 ஆடியோக்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

SCROLL FOR NEXT