தமிழ்நாடு

நகைக்கடையில் போலீஸாா் திருடிய விவகாரம்: காவல் ஆணையருக்கு நோட்டீஸ்

15th Jun 2021 04:42 AM

ADVERTISEMENT

சென்னை: நகைக்கடையில் சோதனை என்ற பெயரில் ரூ.5 லட்சத்தை போலீஸாா் திருடிய விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை, பூக்கடை காவல் நிலைய காவலா்கள் முஜிப் ரகுமான், சுஜின், ஜூன் 9-ஆம் தேதி இரவு, என்எஸ்சி போஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். ஒரு நகைக் கடையின் ஷட்டா் பாதியளவு திறந்திருந்ததைப் பாா்த்து உள்ளே சென்றனா். அங்கு உரிமையாளா், ஊழியா்கள் பணம் எண்ணிக் கொண்டிருந்தனா்.

பணத்துடன் காவல் நிலையம் வருமாறு இருவரும் உரிமையாளரிடம் தெரிவித்தனா். கடை உரிமையாளா் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்குத் தகவல் கொடுத்தாா். அவா் வந்தபின் காவலா்களை அனுப்பி வைத்தாராம்.

கடை உரிமையாளா் பணத்தை எண்ணிப் பாா்த்தபோது ரூ.5 லட்சம் குறைந்திருந்தது தெரியவந்தது. கண்காணிப்புக் கேமராவில் இரு போலீஸாரும் பணத்தைத் திருடியது பதிவாகியிருந்தது.

ADVERTISEMENT

பூக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில் போலீஸாா் திருடியதும் உதவி ஆய்வாளா் கண்ணன் அவா்களுக்கு ஆதரவாக இருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து முஜிப் ரகுமான், சுஜின் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.

இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா், நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தாா். சம்பந்தப்பட்ட காவலா்கள் மீது ஏன் திருட்டு வழக்குப் பதிவு செய்யவில்லை? அவ்வாறு வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளாத பூக்கடை காவல் ஆய்வாளா் மீது ஏன் உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? காவல் ஆய்வாளரின் இத்தகைய செயல் மனித உரிமையை மீறும் செயல் இல்லையா? என கேள்வி எழுப்பினாா்.

இது தொடா்பான விரிவான அறிக்கையை 4 வாரங்களுக்குள் சென்னை காவல் ஆணையா் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT