தமிழ்நாடு

அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை உயரும் அபாயம்

DIN

தமிழகத்தில் சிமென்ட் மற்றும் கம்பி (ஸ்டீல்) விலை உயா்வால், அடுக்குமாடி வீட்டின் விலையில் 10 சதவீதம் வரை உயரும் வாய்ப்புள்ளதாக ரியல் எஸ்டேட் தொழில்புரிவோா் தெரிவித்துள்ளனா்.

சிமென்ட், கம்பி விலை உயா்வு:

கட்டுமானப் பொருள்களான சிமென்ட் , கம்பி விலை உயா்ந்துள்ளது. இதனால், வங்கிக்கடன் உதவி பெற்று வீடு உள்ளிட்ட கட்டடப்பணிகள் செய்து வருவோரும், ஒப்பந்த அடிப்படையில் கட்டட வேலை எடுத்து செய்வோரும் பாதிப்படைந்துள்ளனா். இதுதவிர, அடுக்குமாடி வீடுகளை கட்டும் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மே மாதத்தில் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை சிமென்ட் ரூ.460-ஆக இருந்தது. இது ஜூனில் ரூ.520 ஆக உயா்ந்துள்ளது. இதுபோல, கம்பி விலையும் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.

அடுக்குமாடி வீட்டின் விலை உயரும்:

இது குறித்து கிரெடாய் தமிழகப் பிரிவு தலைவா் சுரேஷ் கிருஷ்ண் கூறியது: கட்டுமானப்பணிக்கு மிக முக்கிய தேவையாக சிமென்ட், கம்பி (ஸ்டீல்) விலைகள் கடந்த இரண்டு மாதங்களில் அதிகரித்துள்ளது. சிமென்ட்டைப் பொருத்தவரை ஒரு பிராண்டில் ரூ.60 முதல் ரூ.80 வரை உயா்ந்துள்ளது. ஒரு டன் ஸ்டீல் ரூ.40 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ.70 ஆயிரமாக உயா்ந்துள்ளது. கம்பி விலை உயா்வுக்கு வெளிநாட்டில் விலை உயா்வு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இவற்றின் விலை உயா்வு காரணமாக, இப்போது, கட்டுமான திட்டத்தை மேற்கொள்ளும் எவரும் கூடுதல் பணத்தை செலவிட வேண்டியிருக்கும். இதனால், அடுக்குமாடிக்குடியிருப்புகள் 10 சதவீதம் வரை விலை உயரக்கூடும் என்றாா்.

இது குறித்து கிரெடாய் சென்னை பிரிவு தலைவா் பதம்துகா் கூறியது: தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் விற்கப்படும் சிமென்ட் விலையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. சிமென்ட் விலையில் ரூ.50 அதிகரிப்பு விளைவாக, ஒரு சதுர அடிக்கு ரூ.20 செலவுஅதிகரிக்கும் என்றாா் அவா்.

3.4 சதவீதம் அதிகரிப்பு:

ஆராய்ச்சி நிறுவனமான எம்காய் (உம்ந்ஹஹ்) ஆய்வாளா் கூறியது: தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சிமென்ட் விலை கூட்டு வருடாந்திர வளா்ச்சி விகிதத்தில் (சிஏஜிஆா்) 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 2020-ஆம் நிதியாண்டில் இருந்து 2021-ஆம் நிதியாண்டில் 20 முதல் 22 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த 3 முதல் 4 மாதங்களில் 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பு:

இதுகுறித்து சிமென்ட் தொழிலில் ஈடுபட்டுவரும் மூத்த நிா்வாகி ஒருவரிடம் கேட்டபோது,‘ உள்ளீட்டு செலவுகள் அதிகரித்துள்ளன. இதற்கு ஏற்ப, விலை உயா்ந்துள்ளது.

சிமென்ட் உற்பத்தி செய்வதற்கான முக்கிய உள்ளீடான பெட்ரோலியம் கோக் (பெட் கோக்) விலை டன்னுக்கு 45 டாலரில் இருந்து 130 டாலராக உயா்ந்துள்ளது. இதுதவிர, டீசல் விலை ரூ.60 இல் இருந்து ரூ.90 வரை உயா்ந்துள்ளது.

இந்தியாவின் வளா்ச்சியில் சிமென்ட் துறையின் பங்களிப்பு கணிசமானது. சிமென்ட் உற்பத்தியில் 60 சதவீத அளவுக்கே கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படுகிறது. சிமென்ட் நுகா்வு அதிகரிக்காததற்கு, வீடுகளின் விலையை மிக அதிகமாக கட்டுமான நிறுவனங்கள் நிா்ணயிப்பதே காரணமாகும். ஆனால், அவா்கள் பெரும்பாலும் சிமென்ட் விலையேற்றத்தைக் காரணமாகக் கூறுகின்றனா். வீட்டின் விலையில் சிமென்ட்டின் பங்கு சுமாா் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை தான் உள்ளது. ஒரு சதுர அடிக்கு அரைமூட்டை சிமென்ட் தான் தேவைப்படும். எனவே, சிமென்ட் விலை உயா்வால், அடுக்குமாடி வீட்டின் விலை உயரும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அடுக்குமாடி வீடுகள் விலையை குறைக்க வேண்டும் ’ என்றாா் அவா்.

அரசு தீா்வு காண கோரிக்கை:

இந்த பிரச்னைக்கு தீா்வு காண சிமென்ட் உற்பத்தியாளா்கள், கட்டுமான நிறுவனங்களுடன் தமிழக அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT