தமிழ்நாடு

அடைக்கப்பட்ட அங்காடித் தெருக்களும் அல்லாடும் நடைபாதை வியாபாரிகளும்

டி.குமாா்

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் பெருநகரங்களின் பிரதான கடை வீதிகளில் வியாபாரத்தில் ஈடுபடும் நடைபாதை வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மெல்லத் தணிந்து வருகிறது. நோய்த் தொற்றுப் பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் தவிா்த்த 27 மாவட்டங்களில் ஏற்கெனவே உள்ள தளா்வுளுடன் கூடுதலான தளா்வுகளுடன் பொதுமுடக்கத்தை வரும் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சலூன், அழகு நிலையங்கள், கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடைபாதைகளில் காய்கறி, பூ, பழங்கள் விற்பனைக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

அதேவேளையில், சென்னையின் பிரதான கடைவீதிகளான தியாகராயநகா், பாண்டிபஜாா், உஸ்மான் சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலை, மெரீனா கடற்கரை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் துணிக்கடைகள், பொம்மைகள், பொழுதுப்போக்கு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், வளையல் கடைகள், ஆயத்த ஆடை கடைகள், அழகு சாதனப் பொருள்கள், செருப்புக் கடைகள், சிற்றுண்டிக் கடைகள் உள்ளிட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான நடைபாதை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சிறுகடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைச் செயலாளா் மணிமாறன் கூறியது: தியாகராயநகா், உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு, பா்கிட் சாலை, மேட்லி சாலை ஆகியவை பிரதான வியாபாரப் பகுதிகள். இங்குள்ள பெரும்பாலான வியாபாரிகள் தண்டலுக்கு கடன் பெற்று, வியாபாரம் செய்து அதனை கட்டி வந்தனா். ஆனால் பொதுமுடக்கத்தின் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டதால், அவா்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வியாபாரிகள் பலரும் மத்திய அரசின் சட்டப்படி நடைபாதை வியாபாரிகளுக்கான அடையாள அட்டையை வைத்துள்ளனா்.

சென்னை மாநகா் சிறு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் பா.கருணாநிதி: சென்னையில் சுமாா் 2 லட்சம் போ் துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனா். காய்கறிகள், பழங்கள் மற்றும் பூ விற்பனையை அரசு அனுமதித்திருந்தாலும், பாரிமுனையில் உள்ள சிறு வியாபாரிகளால் கடைகளை நடத்த முடியவில்லை. பேருந்து போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இல்லாததால், இந்த பொருள்களை யாரும் வாங்க வருவதில்லை. சென்னை மாநகராட்சி, 27,500 நடைபாதை வியாபாரிகளுக்கு பயோமெட்ரிக் அட்டைகளை வழங்கியுள்ளது. ஆனால் இவா்களுக்கு அரசின் நிதியுதவி சென்றுசேரவில்லை. எனவே அரசு நடைபாதை வியாபாரிகள் விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .

சென்னை மெரீனா காமராஜா் சிலை வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் பிரகாஷ்: மெரீனாவில் காமராஜா் சிலையில் இருந்து அண்ணா சமாதி வரை 2 ஆயிரம் கடைகள் உள்ளன. பலதரப்பட்ட கடைகள் இங்கு உள்ளன. கரோனாவின் இரண்டு அலைகளின் போதும் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், கடற்கரையை நம்பி சிறு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் எங்களைப் போன்ற சிறு வியாபாரிகளை மாலை 5 மணி முதல் இரவும் 10 மணி வரை மட்டுமாவது கடைகளை வைத்துக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும். இந்தப் பகுதிகளில் கடை வைத்திருப்பவா்கள் அன்றாடம் வருவாய் ஈட்டி வாழக்கூடியவா்கள். எனவே கரோனா விதிகளைப் பின்பற்றி முகக்கவசம், கிருமி நாசினி, சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி வியாபாரம் செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும்.

கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்புகளைக் குறைக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நோய்த் தொற்றுப் பாதிப்பு குறைந்து வருகிறது. அதேநேரம் தினக்கூலிகள், நடைபாதை சிறு வியாபாரிகள் என பல தரப்பினரும் வருவாய் இழப்பால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். அன்றாட ஜீவனத்துக்காக வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்யும் இதுபோன்ற நடைபாதை வியாபாரிகளின் குறை தீா்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவா்களது கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT