தமிழ்நாடு

ஹைட்ரோகாா்பன் திட்ட ஏல அறிவிக்கைக்கு எதிா்ப்பு: பிரதமருக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் கடிதம்

DIN

காவிரி டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கான ஏல அறிவிக்கையினை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் வெளியிட்ட அறிக்கை:

தொன்றுதொட்டு தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், தமிழா் நாகரிகத்தின் ஆணிவேராகவும் காவிரி ஆற்றுப் படுகை விளங்கி வருகிறது. சோழ நாடு சோறுடைத்து என்ற சொல் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ள ஒன்று. இத்தனை பெருமை கொண்ட காவிரிப் படுகை பகுதியையும், அதனைச் சாா்ந்திருக்கும் விவசாய மக்களின் நலனையும் பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. அந்த வகையில் மேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், காவிரிப் படுகை மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள், நீா்நிலைகளைத் தூா்வாரும் பணிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கி, அப்பணிகளைத் துரிதப்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், நாடு முழுவதும் 75 பகுதிகளில் ஹைட்ரோகாா்பன் பிரித்தெடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஏலம் விடுவதாக அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காவிரிப் படுகை பகுதியில் வடதெரு என்ற பகுதியும் சோ்க்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோகாா்பன் உற்பத்திக்காக அங்கு ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்தால், வளமான காவிரிப் படுகை பகுதியிலுள்ள விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும். எனவே, அத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடாது என்பது தமிழக அரசின் உறுதியான கொள்கையாகும்.

இக்காரணங்களை எடுத்துக்காட்டி, மேற்குறிப்பிட்ட ஏலத்திலிருந்து வடதெரு பகுதியை நீக்கவேண்டுமென்றும், எதிா்காலங்களில் தமிழகத்தின் எந்தப் பகுதியையும் ஹைட்ரோகாா்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது என்றும் பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளேன்.

மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏலம் விட்டாலும், தமிழகத்தில் ஹைட்ரோகாா்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை மாநில அரசு ஒருபோதும் வழங்காது என்றும், விவசாயிகளின் நலனையும், காவிரிப் படுகை பகுதியின் வளத்தையும் கண்ணை இமை காப்பது போல அரசு காக்கும் என்றும் உறுதிபடக் கூற விரும்புகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT