தமிழ்நாடு

மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

13th Jun 2021 01:03 PM

ADVERTISEMENT

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள கருவடத் தெருவில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அறிவித்ததை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் கடந்த 2017 -ம் ஆண்டு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, நெடுவாசல் உள்ளிட்ட  கிராம மக்கள் பல்வேறு கட்டங்களாக 200 நாட்களுக்கு மேல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது. 

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம், கருவடத் தெரு உள்பட நாடு முழுவதும் 75 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு 10-ம் தேதி ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. 

ADVERTISEMENT

இத்திட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வடத்தெருவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் ஓஎன்ஜிசி  நிறுவனம் மூலம் ஆழ்குழாய் கிணறு அமைத்து எரிபொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட இடத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.கே.ஆரோக்கியசாமி தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணமாக நின்றவாறு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நடத்தியதைப் போல தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags : புதுக்கோட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT