தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்ட ஏலத்திற்குக் கண்டனம்: மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு

DIN

மயிலாடுதுறை: காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சர்வதேச ஏலம் விடப்படுவதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து, மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன் வெளியிட்ட அறிக்கையில் கூறியது:

"காவிரிப்படுகையை மரண பூமியாக்க மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஹைட்ரோகார்பன் இயக்குனரகம், ஜூன் 10-ஆம் தேதி சர்வதேச ஏலத்திற்கான அழைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் 30-ஆம் தேதி பன்னாட்டு நிறுவனங்களுடன் ஏலம் தொடர்பாக இணையவழி கலந்துரையாடல் நடத்துகிறது.

எண்ணெய்-எரிவாயு, ஹைட்ரோகார்பன் எடுக்க 'கண்டுபிடிக்கப்பட்ட சிறிய எண்ணெய் வயல்கள்" ஏலத்திட்டத்தின் கீழ் 2017-ஆம் ஆண்டு முதல் ஏலமும், 2018-ஆம் ஆண்டு இரண்டாம் ஏலமும் நடைபெற்றது. தற்போது மூன்றாம் கட்ட ஏலம் பற்றிய அறிவிப்பு கடந்த 10-ஆம் தேதி வெளியானது. 32 ஒப்பந்தப் பகுதிகள் மூலம் 75 எண்ணெய் வயல்களை பெட்ரோலியத் துறை ஏலம் விடுகிறது. காவிரிப்படுகை புதுக்கோட்டை மாவட்டம் வடதெரு கிராமப்பகுதியில் 463.2 சதுர கிலோமீட்டர் பகுதி ஏலம் விடப்படுகிறது. ஜூன் 30-ஆம் தேதி ஏலம் பற்றி பன்னாட்டு முதலாளிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையே இணையவழி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் நெறியற்ற இச்செயலை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு  வன்மையாகக் கண்டிக்கிறது.

ஓஎன்ஜிசி, ஓ.ஐ.எல் போன்ற நிறுவனங்கள் முன்னமே ஆய்வு செய்து அடையாளம் கண்ட பல இடங்களை இந்திய அரசு வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஏலத்தில் ஒப்படைக்கிறது. இந்த ஏலம் முழுவதுமே தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கானது. 

2020 பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்பாட்டு சட்டம் நடைமுறையில் இருக்கும்போதே காவிரிப்படுகையில் எண்ணெய் - எரிவாயு, ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஏல அறிவிப்பை இந்திய அரசு வெளியிடுவது கண்டனத்திற்குரியது.

2020 பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டப்படி தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டத்தில் ஐந்து பிளாக்குகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து பிளாக்குகள் ஆகியன பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. 

இப்போது ஏலத்தில் கொண்டுவரப்படும் வடதெரு நிலப்பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட வரம்புக்குள்பட்ட பகுதியைச் சேர்ந்தது ஆகும்.

இப்பகுதியில் எண்ணெய் - எரிவாயு கிணறுகள் அமைக்க பெட்ரோலியம் சுரங்க குத்தகை மூலம் 2027 வரை ஓஎன்ஜிசி அனுமதி பெற்றுள்ளது என ஏல அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் 20 ஆண்டுகளுக்கு மரபுசார்ந்த மற்றும் மரபுசாரா ஹைட்ரோகார்பன்கள் எடுக்க அனுமதிக்கப்படுவதாகவும் அது கூறுகிறது. மரபுசாரா ஹைட்ரோகார்பன்களை  'ஹைட்ராலிக் பிராக்சரிங்" எனப்படும் அபாயகர நீரியல் விரிசல் முறையின் மூலம் தான் எடுக்க முடியும்.

தமிழ்நாடு வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட பிறகும் கூட காவிரிப் படுகைப் பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க இந்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிடுவது என்பது தமிழ்நாட்டையும், தமிழ்நாடு அரசு இயற்றியுள்ள சட்டத்தையும் அவமதிப்பதாகும்.

இந்திய அரசு ஏலம் விடப்படும் பகுதியிலிருந்து காவிரிப்படுகை பகுதியை கைவிட வேண்டும் என்று கோருகிறோம். 

தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, பெட்ரோலியத் துறை அமைச்சகம் காவிரிப்படுகைப் பகுதியை ஏலப் பட்டியலிலிருந்து  நீக்கம் செய்ய வேண்டுகிறோம். காவிரிப்படுகை முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசை வேண்டிக் கொள்கிறோம். 

எண்ணெய் - எரிவாயு ஹைட்ரோகார்பன் எடுப்பு என்பது தமிழகத்தில் எப்பகுதியிலும் நடைபெறக் கூடாது என்று வலியுறுத்துகிறோம். எதிர்வரும் காலத்தில் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் எண்ணெய் - எரிவாயு, ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கத் தடை செய்யும் வகையில் சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை வகுக்க வேண்டுகிறோம்" என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT