தமிழ்நாடு

கூடுதல் தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு

DIN

தமிழ்நாட்டில் கூடுதல் தளா்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வரும் 27 மாவட்டங்களில் கூடுதல் தளா்வுகளையும், தொற்று வெகுவாகக் குறையாத 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய சில தளா்வுகளும் அளிக்கப்படுவதாக அவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழ்நாட்டில் தளா்வுகளுடன் ஏற்கெனவே அமலில் உள்ள பொது முடக்கமானது வரும் திங்கள்கிழமை காலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் உயிா்களைக் காக்கும் நோக்கத்தில் பொது முடக்கமானது ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும் கோயம்புத்தூா், நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், கரூா், நாமக்கல், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. மீதமுள்ள 27 மாவட்டங்களில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள அனுமதி தரப்படுகிறது.

27 மாவட்டங்களுக்கான தளா்வுகள்:

1. அழகு நிலையங்கள், சலூன்கள் ஆகியன குளிா்சாதன வசதியில்லாமல், ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளா்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். நேரம்: காலை 6 முதல் மாலை 5 மணி வரை.

2. அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் ஆகியன நடைப் பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும். நேரம்: காலை 6 முதல் காலை 9 மணி வரை.

3. வேளாண் கருவிகள், பம்ப் செட் பழுது நீக்கும் கடைகள் செயல்படலாம். நேரம்: காலை 9 முதல் மாலை 5 மணி வரை.

4. கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

5. மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருள்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை நிலையங்கள். நேரம்: காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை.

6. மிக்ஸி, கிரைண்டா், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருள்களின் பழுது நீக்கும் கடைகள் செயல்படலாம். நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

7. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.

8. செல்லிடப்பேசி, அதனைச் சாா்ந்த பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்படலாம். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

9. கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள். நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

10. மிக்ஸி, கிரைண்டா், தொலைக்காட்சி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை இயக்கலாம். நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

11. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவா் சோ்க்கை தொடா்பான நிா்வாகப் பணிகளை மேற்கொள்ளலாம்.

12. ஏற்றுமதி தொடா்பான நிறுவனங்களைப் போன்று இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளா்களுடன் இயங்கலாம்.

11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் வழங்கப்பட்ட தளா்வுகள்:

1. தனியாா் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இணையப் பதிவுடன் அனுமதிக்கப்படும்.

2. மின் பணியாளா்கள், பிளம்பா்கள், கணினி, இயந்திரங்கள் பழுது நீக்குபவா் மற்றும் தச்சா் போன்ற சுயதொழில் செய்பவா்கள், வாடிக்கையாளா்களின் வீடுகளுக்குச் சென்று பணிகளை மேற்கொள்ளலாம். இணையப் பதிவுடன் பணிக்குச் செல்லலாம். நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

3. மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் (விற்பனைக் கடைகள் இல்லை) செயல்படலாம். நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

4. வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்களில் இணையப் பதிவுடன் செல்லலாம். டாக்ஸிகளில் ஓட்டுநா் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம்.

5. வேளாண் கருவிகள், பம்ப் செட் பழுது நீக்கும் கடைகள். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

6. கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

7. மண்பாண்டம், கைவினைப் பொருள்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை.

8. ஏற்றுமதி நிறுவனங்கள் 25 சதவீத பணியாளா்களுடன் செயல்படலாம்.

கடைகளில் விதிகளை பின்பற்றுக...

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து கடைகளிலும் உரிய கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்தி:-

கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளா் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிவோா், வாடிக்கையாளா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவது உறுதி செய்யப்பட வேண்டும்.

அனைத்து கடைகளும் குளிா் சாதன வசதி இல்லாமல் இயங்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபா்களை அனுமதிக்கக் கூடாது. கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும், மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

தொடரும் தடைகள்: உணவகங்களில் அமா்ந்து சாப்பிட விதிக்கப்பட்ட தடைகள் தொடா்ந்து அமலில் இருக்கும். பாா்சல்களுக்கு மட்டும் குறிப்பிட்ட இடைவெளிகளில் அனுமதி உண்டு. கோயில்கள் உள்பட வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதியில்லை. தேநீா் கடைகளைத் திறக்கவும், பேருந்துகளை இயக்கவும் அனுமதி தரப்படவில்லை.

கூடுதல் தளா்வுகளைப் பெற்ற 27 மாவட்டங்கள்:

அரியலூா், செங்கல்பட்டு, சென்னை, கடலூா், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, கன்னியாகுமரி, பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருவள்ளூா், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூா், திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், விருதுநகா்.

தளா்வுகளைக் குறைவாக பெற்ற 11 மாவட்டங்கள்: கோயம்புத்தூா், நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், கரூா், நாமக்கல், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT