தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

DIN

டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''கரோனா நோய்த் தொற்றுப் பரவலை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக ஒருபுறம் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பு கரோனா நோய்த் தொற்றுப் பரவலை அதிகரிக்க வழிவகுக்கும். இந்த அறிவிப்பினைப் பார்க்கும்போது, சமயத்திற்கு தகுந்தாற்போல் ஒரு நிலைப்பாட்டினை திமுக எடுக்கிறதோ என்ற எண்ணம் அனைவரின் மத்தியிலும் மேலோங்கி நிற்கிறது.

2020 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக 3,000 என்றிருந்த நிலையில், உயிரிழப்புகள் சராசரியாக 30 என்றிருந்த நிலையில், சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர மற்றப் பகுதிகளில் 7-05-2020 முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று ஜெயலலிதாவின் வழியில் நடைபெற்ற அதிமுக அரசு அறிவித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக சார்பில் அவரவர்கள் வீடு முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வரும் தன் வீட்டின் முன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000-க்கும் குறைவாகவும், உயிரிழப்பு சராசரியாக தினசரி 100 முதல் 120 என்றிருந்த போது, சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 18-08-2020 முதல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், இது கரோனா பரவலை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும், மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை திறக்கக்கூடாது என்றும் கூறியிருந்தார்.

தற்போது திமுக ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தான் இப்போது தமிழ்நாட்டின் முதல்வர். 11-06-2021 அன்றைய நிலவரப்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,759 என்றிருக்கின்ற சூழ்நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 378 என்றிருக்கின்ற சூழ்நிலையில், 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பினை தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். அதாவது, சென்ற ஆண்டை ஒப்பிடுகையில், மூன்று மடங்குக்கும் மேலாக பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்ற சூழ்நிலையில், மூன்று மடங்குக்கும் மேலாக உயிரிழப்போரின் எண்ணிக்கை இருக்கின்ற சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்ற முடிவு முறைதானா என்பதை முதல்வர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அரசு வருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது என்பதன் அடிப்படையில், 14-06-2021 முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்ற முடிவினை திரும்பப் பெறுமாறு தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT