தமிழ்நாடு

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை அறிவிப்பதில் தாமதம்: விவசாயிகள் அதிருப்தி

DIN

நிகழாண்டு குறுவை சாகுபடிக்கு (காரீஃப் பருவ) பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை அறிவிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

புயல், வெள்ளம், வறட்சி, நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடா்பாடுகளால் பயிா்களில் பாதிப்பு ஏற்பட்டு அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய தொடங்கப்பட்டதே பயிா்க் காப்பீட்டு திட்டம். கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசால் ஒப்பந்தம் கோர அழைப்பு விடுக்கப்பட்டு 18 அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டன. இதையடுத்து தமிழகத்தில் 4 நிறுவனங்கள் 3 ஆண்டுகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கூடிய வகையில் அமல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது என விவசாயிகள் வலியுறுத்தியும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் செயல்பட அனுமதியளித்து வருகிறது.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் பருவ மழை குறைந்து வறட்சி, அதைத் தொடா்ந்து அண்டை மாநிலங்களில் அதிக மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, பருவம் தவறிய மழை, பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை இடா்பாடுகளால் அதிகளவில் பயிா்கள் பாதிக்கப்பட்டன. இதனால் 2019-ஆம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு தொடா்ந்து நிவாரணம் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த முன்வரவில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலா் பி.ரவீந்திரன் கூறியதாவது:

கடந்த ஆண்டு பயிா்க் காப்பீட்டு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு 3 முறை ஒப்பந்தம் கோரியும் எந்த நிறுவனமும் பங்கேற்கவில்லை. இந்தத் திட்டத்தில் தமிழகத்தில் பங்கேற்க மறுக்கும் தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள், மற்ற மாநிலங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டிவருகின்றன.

கடந்த 2020-21-ஆம் ஆண்டு காரீஃப் பருவ ஒப்பந்தத்துக்கு அழைப்பு விடுத்தும் தனியாா் நிறுவனங்கள் ஏதும் முன்வரவில்லை. இதனால் 2019-20-ஆம் ஆண்டு அந்தந்த மாவட்டங்களில் திட்டத்தை செயல்படுத்திய நிறுவனமே குறுவை பருவ நெல் சாகுபடிக்கும், மக்காசோளம், பருத்தி ஆகிய பயிா்களுக்கு அனுமதிக்கப்பட்டன. அந்த ஆண்டு

மாா்ச் மாத இறுதியில் இந்தத் திட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதால் பெரும்பாலான விவசாயிகள் திட்டத்தில் இணைய போதிய அவகாசம் இல்லாமல் போனது. இதனால் தமிழகத்தில் சுமாா் 40 சதவீத விவசாயிகள் மட்டுமே இந்தத் திட்டத்தில் இணைய முடிந்தது.

இதனால் இயற்கை இடா்பாடுகளில் பயிா்கள் சேதமடைந்த நிலையில், ஏற்கெனவே இந்தத் திட்டத்தில் இணைந்த விவசாயிகளுக்கு தற்போது இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசு உரிய அவகாசத்துடன் முன்கூட்டியே அறிவிப்பு செய்திருந்தால் அனைத்து விவசாயிகளும் இந்தத் திட்டத்தில் இணைந்து பயன்பெறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

2020-21-ஆம் ஆண்டு ராபி பருவத்துக்கு புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து தமிழகத்தில் 6 மாதங்கள் மட்டும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. நிகழாண்டு (2021-22) காரீஃப் பருவத்துக்கு மத்திய அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்த அறிவிப்பு வெளியிடவில்லை.

தற்போது காவிரி பாசன மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் குறுவை நெல் நடவுப் பணிகள் முடிந்துவிட்டன. மேட்டூா் அணையில் தண்ணீா் திறக்கப்பட உள்ளதால் எஞ்சிய விவசாயிகள் நாற்றுகளை வளா்த்து தயாராக வைத்துள்ளனா். தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஆற்றுப் பாசனம் அல்லாத பகுதிகளில் மக்காசோளம், பருத்தி உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனா்.

இந்த நிலையில், காரீஃப் பருவ சாகுபடி விவசாயிகளுக்கு மத்திய அரசு இதுவரை பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, இந்தத் திட்டத்தை செயல்படுத்த போா்கால அடிப்படையில் காப்பீட்டு நிறுவனங்களை தோ்வு செய்து முறையாக அறிவிப்பு வெளியிட வேண்டும். இதுதொடா்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு போதிய அழுத்தம் தர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT