தமிழ்நாடு

விளாத்திகுளம் எம்.எல்.ஏ. அலுவலகம் கலைஞர் மக்கள் மருத்துவமனையாக மாற்றம்

6th Jun 2021 03:25 PM

ADVERTISEMENT

விளாத்திகுளம் எம்.எல்.ஏ. அலுவலகம் கலைஞர் மக்கள் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பங்கேற்ற கனிமொழி எம்.பி. குத்துவிளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தார். 

விளாத்திகுளம் பேருந்து நிலையம் எதிரில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அமைந்துள்ளது. அண்மையில் பொதுப்பணித் துறையினரால் சீரமைக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகமாக செயல்பட தயார் நிலையில் இருந்தது.

இந்நிலையில் தொகுதி மக்கள் நலன் கருதி கரோனா சிகிச்சை மையத்திற்காகவும் மருத்துவமனையாகவும் செயல்பட சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் அலுவலகத்தை சுகாதாரத்துறைக்கு வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற திறப்பு விழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தார். பின்னர் அங்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணிகளை தொடங்கிவைத்து  தாய்மார்களுக்கு  ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து இசைமேதை ஸ்ரீ நல்லப்ப சுவாமிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வதற்கான இடத்தை பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் பகுதிகளில் சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளிகள் மற்றும் ஏழை எளியோருக்கு அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.

தமிழ்நாட்டில் முதன்முதலாக சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை அரசு மருத்துவமனைக்கு  வழங்கியது குறித்து விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் கூறுகையில், கரோனா  காலகட்டத்தில் தொகுதி மக்களுக்கு பயன்படும் பொருட்டும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டும் எனது சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை கரோனோ சிகிச்சை மையமாகவும், ஐந்து முறை தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து மக்களுக்கு நல்ல பல திட்டங்கள் தந்த கலைஞரின் பெயரில் மக்கள் மருத்துவமனையாகவும் செயல்பட  இன்று ஒப்படைத்துள்ளேன். இது ஒரு மினி மருத்துவமனையாக தொடர்ந்து செயல்படும். வானம் பார்த்த கரிசல் பூமியான விளாத்திகுளம் தொகுதி முழுவதும் நீர் வழித்தடங்கள் மற்றும் குளங்களை சீரமைப்பது, மரக்கன்றுகள் நடுவது, நீர் ஆதாரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு வரும் ஐந்தாண்டுகளில்  முக்கியத்துவம் அளிக்கப்படும்  என்றார்.

தொடர்ந்து கனிமொழி எம்.பி. கூறுகையில், மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் உயர் படிப்புக்காக நடத்தப்படும் நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்வதற்காக தமிழக அரசு ஒரு ஆய்வு குழு அமைத்துள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி நிச்சயமாக நீட் தேர்வு இல்லாத ஒரு சூழ்நிலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உருவாக்குவார். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மகளிர் உரிமை துறை  அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : thoothukudi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT