தமிழ்நாடு

கரோனா தடுப்பூசிக்கான டெண்டர் எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

6th Jun 2021 01:02 PM

ADVERTISEMENT


உதகை:  கரோனா தடுப்பூசிக்கான டெண்டர் எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். 

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை உதகை வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், உதகை அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.  பின்னர் அரசு மருத்துவமனை கல்லூரியையும் பார்வையிட்டு மசினகுடி பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமத்தில் சுமார் 170-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

உதகையில் அமைச்சர் மா.சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பு என்பது படிப்படியாக குறைந்து வருகிறது. கரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு உலக அளவில் தமிழக அரசு சார்பில் போடப்பட்ட அதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஆனால், இதுவரை எந்த நிறுவனமும் தடுப்பூசி வழங்க முன்வரவில்லை. இதற்கு மத்திய அரசு தந்த அழுத்தம் என்பது அபத்தம். 
எந்த காரணத்தினால் டெண்டர் எடுக்க வில்லை என்று ஆய்வு செய்து, மீண்டும்  உலகலாவிய டெண்டர் விடப்படும். 

ADVERTISEMENT

விரைவில் தமிழகத்திலேயே தடுப்பூசிக்கான உற்பத்திக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் அதேபோல் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் உள்பட பணியிடங்கள் நிரப்பப்பட்டு பெருந்தொற்று காலத்தில் சிகிச்சைகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

தனியார் மருத்துவமனைகள் அரசு அறிவுறுத்தியுள்ள வழிமுறைகளின்படி செயல்படுகிறதா என நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மீறி செயல்படும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

மேலும் நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் ஆம்புலன்ஸ் சேவை கிராமங்களுக்கு செல்வதில் சிக்கல் உள்ளது. அதனால் நவீன கார் ஆம்புலன்ஸ் வசதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டு மாவட்டத்தில் இரு ஆம்புலன்ஸ் செயல்படுத்தப்பட்டு உள்ளது. 

நீலகிரி - நீலகிரி மாவட்டத்தில் உள்ள இருளர், குறும்பர், காட்டுநாயகர் உள்பட 7 வகையான பழங்குடியினர் மக்கள் அதிகமாக உள்ளதால் அனைவருக்கும்  இம் மாதம் இறுதிக்குள் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இதன் மூலம் பழங்குடியினர்களுக்கு  நாட்டில் முதன் முறையாக முழுமையாக தடுப்பூசி செலுத்திய மாநிலம் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டம் என்ற பெருமையை பெறும் என தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை மசினகுடி அருகே செம்ம நத்தம் பகுதியில் பழங்குடியினருக்கான தடுப்பூசி செலுத்திய பின்பு விஷன் அமைப்பு சார்பில் தன்னார்வலர்கள் மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினர். தொடர்ந்து பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராம பகுதிகளில் நிவாரண தொகுப்புகளை வழங்கவுள்ளதாக விஷன் அமைப்பினர் தெரிவித்தனர்.

Tags : Corona vaccine No company comes
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT