தமிழ்நாடு

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

6th Jun 2021 02:19 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: 

மத்தியப் பிரதேசம் முதல் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

அதேபோன்று 07.06.2021 மற்றும் 08.06.2021 ஆகிய நாள்களில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

09.6.2021 மற்றும் 10.6.2021 ஆகிய நாள்களில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருமயம்(புதுக்கோட்டை) 19 செ.மீ மழையும், லப்பைகுடிக்காடு(பெரம்பலூர்) 9 செ.மீ மழையும் பெய்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

08.06.2021-ல் மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.

09.06.2021 மற்றும் 10.06.2021-ல் மத்திய வங்கக் கடல், தெற்கு கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.

08.06.2021, 10.06.2021 ஆகிய நாள்களில் கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட தேதிகளில்  அந்தந்த பகுதி மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : chennai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT