தமிழ்நாடு

திருச்சி: ஆம்புலன்ஸ் உரிமையாளரின் மனைவி, குழந்தைகள் தற்கொலை முயற்சி; சிறுவன் உயிரிழப்பு

6th Jun 2021 05:06 PM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சியில் ஆம்புலன்ஸ் உரிமையாளரின் மனைவி மற்றும் குழந்தைகள் 4 பேர் விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதில் சிறுவன் உயிரிழந்தான். 

திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்குமலை வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் நந்தகுமார்(45). இவர் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்துள்ளதுடன் மேலும் 4 ஆம்புலன்ஸ்களை வைத்தும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சித்ராதேவி(40) மகள்கள் தனலட்சுமி (19),  திவ்யா (17), மகன் விக்னேஸ்வரன் (13) ஆகிய 4 பேரும் சனிக்கிழமை மாலை வீட்டில் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு துவாக்குடியில் உள்ள வட்டார அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ADVERTISEMENT

இதில் சிகிச்சை பலனின்றி சிறுவன் விக்னேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். மேலும், சித்ராதேவி, தனலட்சுமி, திவ்யா ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிந்து தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகள் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. நந்தகுமார் உதவும் மனப்பான்மையுடன் அப்பகுதியில் ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட இதர பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குடும்பத்தினருக்கு பிடிக்காததால் தகராறு ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என  பல்வேறு கோணங்களில் போலீஸôர்  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த  விக்னேஷ்வரன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும்  சிகிச்சையில் உள்ள மகள்களான தனலட்சுமி திருச்சியில் தனியார் கல்லூரியில் பி.காம்., படிப்பும்,  திவ்யா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம்  வகுப்பும் படித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : திருச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT