தமிழ்நாடு

தமிழ் மத்திய அரசின் அலுவல் மொழியாக்க திமுக பாடுபடும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

6th Jun 2021 02:23 PM

ADVERTISEMENT


சென்னை: எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் மத்திய அரசின் ஆட்சி - அலுவல் மொழியாகிட திமுக அரசு உறுதியுடன் பாடுபடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது: 

தமிழ்க்  கொடியைக் கையில் ஏந்தி 14 வயதிலேயே தாய்மொழி காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கருணாநிதியின் மொழி - இனப் போராட்ட வரலாற்றின் இன்றியமையாத சாதனைகளில் ஒன்று, நம் தமிழ்மொழிக்கு மத்திய அரசின் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்ததாகும்.

பரிதிமாற்கலைஞரில் தொடங்கி பல தமிழறிஞர்களும் 100 ஆண்டு காலமாக வலியுறுத்திய செம்மொழித் தகுதி, கருணாநிதி அவர்களின் பெருமுயற்சியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் வலியுறுத்தப்பட்டது. கூட்டணியின் தலைவராக இருந்த சோனியாகாந்தி அவர்களும், பிரதமர் பொறுப்பு வகித்த மாண்புக்குரிய மன்மோகன் சிங் அவர்களும் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்றனர். தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு 2004- ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி வெளியானது. அதற்கான அரசாணை அதே ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

உலகின் மூத்த மொழியும், திராவிடமொழிக் குடும்பத்தின் தாயாக விளங்கும் மொழியும், இலக்கிய - இலக்கண வளங்கள் கொண்ட சிறப்பான மொழியும், பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, கல்வெட்டுக் காலம் முதல் கணினிக் காலம் வரை சிறப்புற்று விளங்கும் மொழியான அன்னைத் தமிழ்மொழிக்கு கருணாநிதி சூட்டிய அணிகலனே, செம்மொழித் தகுதியாகும்.

அந்தத் தகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், எத்திசையும் தமிழ்மணக்க, திமுக அரசு தொடர்ந்து உழைத்திடும். நமது அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்டஅனைத்து மொழிகளும் மத்திய அரசின் ஆட்சி - அலுவல் மொழியாகிட உறுதியுடன் பாடுபடும் என்று முதல் ஸ்டாலின் கூறியுள்ளார். 
 

Tags : Tamil official language Central Government Chief Minister M.K. Stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT